தடையை மீறி கடலுக்கு மீன்பிடிக்க சென்றால் சட்டப்படி நடவடிக்கை
நாகை மாவட்டத்தில் நாளை (சனிக்கிழமை) முதல் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படுகிறது. தடையை மீறி கடலுக்கு மீன்பிடிக்க சென்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் அருண்தம்புராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாகை மாவட்டத்தில் நாளை (சனிக்கிழமை) முதல் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படுகிறது. தடையை மீறி கடலுக்கு மீன்பிடிக்க சென்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் அருண்தம்புராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தடைக்காலம்
தமிழகத்தின் கடற்பகுதிகளில் மீன் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும், மீன்வளத்தை பாதுகாக்கும் நோக்கத்திலும் ஆண்டு தோறும் ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரை மொத்தம் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படும்.
இந்த தடைக்காலத்தில் விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் மூலம் கடலில் மீன்பிடிப்பதற்கு தடை விதிக்கப்படும்.
மீன்பிடிக்க செல்லக்கூடாது
அதன்படிதமிழகத்தில் நாளை (சனிக்கிழமை) முதல் மீன்பிடி தடைக்காலம் தொடங்குகிறது. இந்த 61 நாட்களுக்கு மீன்வளத்தை பாதுகாக்கும் பொருட்டு நாகை மாவட்டத்தில் பைபர் படகுகளை தவிர, விசைப்படகுகள், இழுவைப்படகுகளில் கடலில் மீன்பிடிக்க செல்ல கூடாது.
மேலும் கடலில் மீன் பிடித்துக்கொண்டிருக்கும் படகுகள் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 12 மணிக்குள் கரை திரும்ப வேண்டும்.
தடையை மீறினால் நடவடிக்கை
தடையை மீறி மீன்பிடிப்பில் ஈடுபடும் படகுகள் மீது தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.