ஒற்றுமையாக வாழ்ந்தால் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய முடியும் - மாணவர்களுக்கு வைகோ அறிவுரை
“ஒற்றுமையாக வாழ்ந்தால் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய முடியும்” என்று கலிங்கப்பட்டி அரசு பள்ளி ஆண்டு விழாவில் மாணவர்களுக்கு வைகோ அறிவுரை கூறினார்.
திருவேங்கடம்:
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகா கலிங்கப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா நடந்தது. விழாவுக்கு ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
மாணவ- மாணவிகளான நீங்கள் ஒற்றுமையுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும். ஒற்றுமையாக வாழ்ந்தால் தான் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய முடியும். மேலும் நீங்கள் நல்ல பழக்கங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதன்மூலம் நீங்கள் இந்த உலகில் பெரிய வெற்றியை அடைய முடியும். மதுவின் தீமை குறித்து கலைநிகழ்ச்சிகள் மூலம் அழகாக சிறப்பாக நடித்துக் காட்டினீர்கள். ஓவிய கண்காட்சியிலும் அருமையாக தங்கள் கற்பனை திறனை வெளிக்காட்டி இருந்தீர்கள். அறிவில் சிறந்து விளங்கி விஞ்ஞானிகளாகவும், என்ஜினீயர்களாகவும் மாற வேண்டும்.
ஆசிரியர்கள் குழந்தைகளை கண்டித்தால் உடனே பெற்றோர்கள் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியரிடம் சென்று சண்டை போடாதீர்கள். நீங்கள் செய்ய வேண்டிய வேலையை அவர்கள் செய்து உங்கள் குழந்தைகளை நல்வழிப்படுத்துகிறார்கள். தமிழ் இலக்கியங்களான சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி, திருக்குறள், சிலப்பதிகாரம் உள்ளிட்டவற்றை படித்து நல்வழியில் வாழ வேண்டும். நன்றாக படித்து உயர்ந்த வாழ்க்கை வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.
கலிங்கப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு பல்வேறு வசதிகளை முன்னின்று செய்து 30 படுக்கைகளுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட சுகாதார மையமாக அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். நாங்கள் படிக்கும்போது இந்த பள்ளிகள் கூரை கூடங்களாக இருந்தன. இப்போது கான்கிரீட் சுவர் அமைக்கப்பட்டு உங்களுக்கு பல்வேறு வசதிகளை அரசும், நாங்களும் செய்துள்ளோம். இந்த உலகிலேயே இயற்கைக்கு, மாட்டுக்கு, மண்ணுக்கு விழா எடுக்கும் ஒரே இனம் தமிழினம் தான். அந்த நிகழ்வு தான் தமிழர் திருநாளாம் தைத்திருநாள். அதற்காக நான் உங்கள் அனைவருக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும எனது பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு வைகோ கூறினார்.
தொடர்ந்து அவர் வகுப்பு வாரியாக முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ-மாணவிகளுக்கும், விளையாட்டு போட்டிகளில் சாதனை படைத்தவர்களுக்கும், 100 சதவீதம் வருகை புரிந்தவர்களுக்கும் தனது சொந்த செலவில் பரிசுகளை வழங்கினார். முன்னதாக தலைமை ஆசிரியர் ராம்குமார் வரவேற்று பேசினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சுப்பாராம், பள்ளி வளர்ச்சி குழு உறுப்பினர் வேணுகோபால் ஆகியோர் முன்னிலை வைத்தனர். கணித ஆசிரியர் ராஜேஷ் ஆண்டறிக்கை வாசித்தார். மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆசிரியர் ராதாகிருஷ்ணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் தி.மு. ராஜேந்திரன், மாவட்ட கவுன்சிலர் தேவி ராஜகோபால், கலிங்கப்பட்டி பஞ்சாயத்து தலைவர் மணிமொழி சந்துரு, ஒன்றிய கவுன்சிலர் அருள்குமார் மற்றும் பெற்றோர்கள், ஆசிரியர்-ஆசிரியைகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் தமிழ் ஆசிரியர் சீனிவாசன் நன்றி கூறினார்.