தமிழகத்தில் 2 ஆண்டு பணியாற்ற மறுத்தால் ரூ.50 லட்சத்தை செலுத்துங்கள்-கேரள டாக்டருக்கு மதுரை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு


தமிழகத்தில் 2 ஆண்டு பணியாற்ற மறுத்தால் ரூ.50 லட்சத்தை செலுத்துங்கள்-கேரள டாக்டருக்கு மதுரை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
x

நெல்லை மருத்துவக்கல்லூரியில் பட்ட மேற்படிப்பு படித்ததால், தமிழகத்தில் 2 ஆண்டு பணியாற்ற வேண்டும் அல்லது ரூ.50 லட்சத்தை செலுத்துங்கள் என்று கேரள டாக்டருக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை

நெல்லை மருத்துவக்கல்லூரியில் பட்ட மேற்படிப்பு படித்ததால், தமிழகத்தில் 2 ஆண்டு பணியாற்ற வேண்டும் அல்லது ரூ.50 லட்சத்தை செலுத்துங்கள் என்று கேரள டாக்டருக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

நரம்பியல் துறை பட்டமேற்படிப்பு

கேரள மாநிலத்தை சேர்ந்த டாக்டர் ஸ்ரீஜித் வி.ரவி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

நெல்லை மருத்துவ கல்லூரியில் நரம்பியல் பட்ட மேற்படிப்பு படிக்க, அகில இந்திய இடஒதுக்கீட்டின்கீழ் இடம் கிடைத்தது. கடந்த 2020-ம் ஆண்டு இந்த பட்ட மேற்படிப்பை முடித்தேன். இந்த படிப்பில் சேரும்போது, படிப்பை முடித்தவுடன், தமிழகத்தில் 10 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும். தவறும்பட்சத்தில் ரூ.2 கோடியை செலுத்த வேண்டும் என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கியிருந்தனர். இந்தநிலையில் ஒப்பந்த அடிப்படையில் 10 ஆண்டுகள் தமிழகத்தில் பணியாற்ற வேண்டும் அல்லது 2 கோடி ரூபாயை செலுத்த வேண்டும் என எனக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நோட்டீசை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

நிபந்தனை தளர்வு

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன் ஆஜராகி, மனுதாரருக்கு பணி வழங்கும் வகையில் கலந்தாய்வில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அவர் அதில் கலந்து கொள்ளவில்லை. இதற்கிடையே 10 ஆண்டு கால பணி என்பதை 2 ஆண்டு எனவும், ரூ.2 கோடி இழப்பீட்டை ரூ.50 லட்சமாகவும் குறைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. எனவே இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று வாதாடினார்.

விசாரணை முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

இதுதொடர்பான வழக்கில், அனைத்து மாநிலங்களிலும் இட ஒதுக்கீட்டில் படிக்கும் மாணவர்களுக்கான கட்டாய பணி ஒப்பந்தங்கள் மற்றும் இழப்பீட்டுத் தொகையை நாடு முழுவதும் ஒரே மாதிரியாக நிர்ணயம் செய்யும்படி சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளது.

டாக்டருக்கு உத்தரவு

இந்த வழக்கை பொறுத்தவரை மனுதாரர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்பு ஆஜராகும்படி கோர்ட்டு அறிவுறுத்தியும் மனுதாரர் ஆஜராகவில்லை. மனுதாரருக்கு நாகப்பட்டினத்தில் துணை அறுவை சிகிச்சை டாக்டர் பணி வழங்கப்பட்டு, நல்ல சம்பளம் நிர்ணயிக்கப்பட்டபோதும், மனுதாரர் தமிழகத்தில் பணியாற்ற தயாராக இல்லை. தமிழ் மொழியில் கட்டாயம் தேர்ச்சி பெற கட்டாயப்படுத்துவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அவர் தமிழகத்தில் பணியாற்ற விரும்பவில்லை. இந்த வழக்கை பொறுத்தவரை மனுதாரர் தமிழகத்தில் 2 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும் அல்லது அரசு நிர்ணயித்து உள்ள 50 லட்ச ரூபாயை செலுத்த வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.


Related Tags :
Next Story