போலீசார் மீது விசாரணை நடத்த ஐ.ஜி. உத்தரவு


போலீசார் மீது விசாரணை நடத்த ஐ.ஜி. உத்தரவு
x

2 செல்போன்களை திருடி விற்ற விவகாரத்தில் போலீசார் மீது விசாரணை நடத்த ஐ.ஜி. உத்தரவிட்டு உள்ளார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் ஆயுதப்படை பிரிவில் காவலராக பணியாற்றி வந்த அசோக்குமார் என்பவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தபோது கடந்த மார்ச் மாதம் அவர் தொடர்பான ஆவணங்கள் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசாரிடமிருந்து கொடுக்கப்பட்டது. அப்போது அசோக்குமாரின் 2 செல்போன்கள் எங்கே என்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் கேட்டபோது கேணிக்கரை காவல்நிலைய பீரோவில் தேடிப்பார்த்தபோது அது மாயமாகி இருந்தது. அந்த 2 செல்போன்களை திருடி விற்றதாக ராமநாதபுரம் கேணிக்கரை காவல்நிலைய எழுத்தர் சுரேஷ், ஏட்டு கமலக்கண்ணன் ஆகிய 2 பேரையும் தற்காலிக பணிநீக்கம் செய்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.

இந்த சம்பவத்தில் முக்கிய நபராக கருதப்படும் எழுத்தர் சுரேஷ் மீது போலீசாரே அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்து வருகின்றனர்.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ராமநாதபுரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் கள்ளத்துப்பாக்கிகளுடன் பிடிபட்ட சம்பவத்தில் முக்கிய நபராக இந்த சுரேஷ் இருந்ததால் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காத தை காரணம் காட்டி தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார். பணிநீக்கம் செய்யப்பட்ட காவல்நிலையத்திலேயே மீண்டும் பணிக்கு வந்துள்ளார். இதுபோன்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் கூறப்படுவதால் தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. அஸ்ரா கார்க் மேற்கண்ட சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். காவல்நிலையத்தில் உள்ள வழக்கு தொடர்பான ஆவணங்கள், பொருட்கள் முதலியவை சரியாக உள்ளதா? என்று ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளார்.


Related Tags :
Next Story