இப்படிப்பட்ட அன்னையை வேறேங்கும் காணமுடியுமோ?பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு இளையராஜா எம்.பி. இரங்கல் கடிதம்
பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு இளையராஜா எம்.பி. இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை,
பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் (100) உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவர் அகமதாபாத்தில் உள்ள ஐநா மேத்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.உடல்நலக்குறைவால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு இருந்த பிரதமரின் தாயார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தகவல் அறிந்த உடனேயே டெல்லியில் இருந்து குஜராத் புறப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி, அஹமதாபாத் விமான நிலையத்தில் இருந்து நேரடியாக தனது தாயார் உடல் வைக்கப்பட்டிருந்த சகோதரரின் வீட்டிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். இறுதிச் சடங்கில் பங்கேற்ற பிரதமர், தாயாரின் பூத உடலை தோளில் சுமந்து சென்று, மயானத்தில் அவரது சிதைக்கு தீ மூட்டினார்
இந்தநிலையில், பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு இசையமைப்பாளரும் எம்.பி.யுமான இளையராஜா இரங்கல் கடிதம் எழுதி உள்ளார். அதில்,
நமது பாரதப் பிரதமர் மோடி அவர்களின் தாயார் மறைவுற்ற செய்தி கேட்டு மிகுந்த துயரமும் வருத்தமும் அடைகிறேன்.
பிரதமரின் தாயாக இருந்தாலும் தன் மகனிடம் இருந்து எதையும் எதிர்பார்க்காதத தாய்...! எனது தாயாரும் அவ்வாறே! என்னிடம் எதையும் கேட்டதில்லை. நானும் எதுவுமே கொடுத்ததில்லை.
இப்படிப்பட்ட அன்னையர்களை உலகில் வேறேங்கும் காணமுடியுமோ? அவர் மறைந்தது துயரமே! நமது பிரதமர் அவர்கள் துயரத்தில் நான் பங்குகொள்கிறேன். அன்னை ஆத்மா சாந்தி அடைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்! என அதில் கூறியுள்ளார்.