கர்ப்பிணியை தொட்டில் கட்டி சுமந்து வந்த மலைவாழ் மக்கள்


கர்ப்பிணியை தொட்டில் கட்டி சுமந்து வந்த மலைவாழ் மக்கள்
x

கர்ப்பிணியை தொட்டில் கட்டி சுமந்து வந்த மலைவாழ் மக்கள்

திருப்பூர்

தளி

உடுமலை வனப்பகுதியில் உடல் நலம் பாதிக்கப்பட்ட கர்ப்பிணியை தொட்டில் கட்டி மலைவாழ் மக்கள் ஆஸ்பத்திரிக்கு சுமந்து வந்தனர்.

மலைவாழ் மக்கள்

உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்குள்ள தளிஞ்சி, தளிஞ்சிவயல், ஆட்டுமலை, ஈசல்தட்டு, பொருப்பாறு, கோடந்தூர், குருமலை, மாவடப்பு, மஞ்சம்பட்டி, கீழானவயல், கருமுட்டி, பூச்சகொட்டாம்பாறை, குளிப்பட்டி, முள்ளுப்பட்டி உள்ளிட்ட மலைவாழ் குடியிருப்புகளில் ஏராளமான மலைவாழ் மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் விவசாயத்தை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி ஆடு, மாடு, கோழி வளர்ப்பு, தைலம் காய்ச்சுதல், தேன்எடுத்தல் ஆகிய தொழில்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களுக்கு தகவல் தொடர்பு, பாதை வசதி இல்லாததால் அவசரகால உதவிகளை பெறுவதில் சிரமப்படுகிறார்கள். அந்த வகையில் குழிப்பட்டியைச் சேர்ந்த விஜயன் மனைவியான 4 மாத கர்ப்பிணி சரண்யாவுக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக மலைவாழ் மக்கள் தொட்டில் கட்டி சுமந்து வந்தனர்.

தொட்டில் கட்டி

இது குறித்து குழிப்பட்டி மலைவாழ் மக்கள் கூறியதாவது:-

வனப்பகுதியில் வசித்து வருகின்ற எங்களுக்கு சமதளப்பரப்பு போன்று எந்த ஒரு உதவியும் எளிதில் கிடைக்காது. பிரசவம், உடல்நலக்குறைவு, விபத்து, வனவிலங்குகளால் ஏற்படும் தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்களில் பாதிப்படையும் பொதுமக்களை எளிதில் மருத்துவ சிகிச்சைக்கு கொண்டு செல்ல முடியாது.

அதைத்தொடர்ந்து தொட்டில் கட்டி அடர்ந்த வனப்பகுதியில் உள்ள ஒற்றையடிப்பாதையின் வழியாக அடிவாரத்தில் பொன்னாலம்மன் சோலை பகுதிக்கு சுமந்து வந்து, அங்கிருந்து வாகனத்தை பிடித்து ஆஸ்பத்திரிக்கு சென்றோம்.

தொலை தொடர்பு வசதி

மேலும் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள மலைவாழ் மக்களுக்கு பாதை மற்றும் தொலைத்தொடர்பு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை முழுமையாக பூர்த்தி செய்து தருமாறும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் அதிகாரிகள் எங்களது கோரிக்கையை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.



Next Story