டாஸ்மாக் கடையுடன் சட்டவிரோத மதுபானக்கூடம் செயல்படுகிறதா? -கலெக்டர் ஆய்வு செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


டாஸ்மாக் கடையுடன் சட்டவிரோத மதுபானக்கூடம் செயல்படுகிறதா? -கலெக்டர் ஆய்வு செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x

டாஸ்மாக் கடையுடன் சட்டவிரோத மதுபானக்கூடம் செயல்படுகிறதா? என்று கலெக்டர் ஆய்வு செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது

மதுரை


தேனி மாவட்டம் பூதிப்புரத்தைச் சேர்ந்த செல்வம், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

பூதிப்புரம் பேரூராட்சியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பூதிப்புரம் அரசு ஆஸ்பத்திரி, பஸ் நிறுத்தம் அருகே கடந்த 2 ஆண்டுகளாக டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடை அருகில் சட்டவிரோத 'பார்' நடத்தப்படுகிறது.

அந்த பகுதியில் நஞ்சுண்டேஸ்வர மூர்த்தி கோவில், மகாலட்சுமி கோவில், சாய்பாபா கோவில் ஆகியவையும் உள்ளன. பொதுமக்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள், நோயாளிகள், முதியவர்கள், வேலைக்கு செல்லும் பெண்கள் என ஏராளமானோர் டாஸ்மாக் கடையை கடந்து செல்கிறார்கள்.

பலர் மது குடித்துவிட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்கின்றனர். சமீபத்தில் பூதிப்புரத்துக்கு தேனி மாவட்ட கலெக்டர் வந்தபோது, அவரிடம் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மனு அளித்தோம். இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே பூதிப்புரத்தில் உள்ள டாஸ்மாக் கடையுடன் இணைந்து சட்டவிரோதமாக செயல்படும் பார் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுத்து அகற்ற உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடை பகுதியில் செயல்படும் மதுபானக்கூடத்தை (பார்) தேனி மாவட்ட கலெக்டர், வருவாய் அலுவலர் உள்ளிட்டோர் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 18-ந்தேதிக்கு ஒத்தி வைத்தனர்.


Next Story