ஒரே மோட்டார் சைக்கிளில் விதியை மீறி பயணம்: 4 மாணவர்களுக்கு போலீசார் நூதன தண்டனை
ஒரே மோட்டார் சைக்கிளில் விதியை மீறி பயணம் செய்த 4 மாணவர்களுக்கு போலீசார் நூதன தண்டனை கொடுத்தனர்.
வடமதுரை பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன் மற்றும் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளில் 4 வாலிபர்கள் பயணம் செய்தனர். இதைப்பார்த்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அதில் அவர்கள் வடமதுரை பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும், அங்குள்ள ஒரு கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை வடமதுரை போலீஸ் நிலையம் அழைத்து வந்த போலீசார், 4 மாணவர்களுக்கும் நூதன முறையில் தண்டனை கொடுத்தனர்.
அதாவது ஒரு பேப்பரில் "இனிமேல் நாங்கள் மோட்டார் சைக்கிளில் 2 பேருக்கு மேல் செல்லமாட்டோம்" என்று 100 முறை எழுத வைத்தனர். மேலும் மாணவர்களின் பெற்றோர்களை வரவழைத்த போலீசார் தங்களது குழந்தைகளை இனிமேல் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்ட அனுமதிக்கக்கூடாது. மேலும் 2 பேருக்கு மேல் மோட்டார் சைக்கிளில் செல்லவும் அனுமதிக்கக்கூடாது என்று எச்சரிக்கை செய்து பெற்றோருடன் மாணவர்களை அனுப்பி வைத்தனர்.