சட்டவிரோத ஆயுத பயன்பாடு நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்தானது - லைசென்சு பெறாமல் துப்பாக்கி வைத்திருப்பதை முழுமையாக தடுப்பது அவசியம் - மதுரை ஐகோர்ட்டு கருத்து
லைசென்சு பெறாமல் துப்பாக்கி வைத்திருப்பதை முழுமையாக தடுப்பது அவசியம் என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
லைசென்சு பெறாமல் துப்பாக்கி வைத்திருப்பதை முழுமையாக தடுப்பது அவசியம் என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
ஆயுத வழக்குகள்
மதுரை நாகனாகுளத்தைச் சேர்ந்த வக்கீல் கார்மேகம், மதுரை ஐகோர்ட்டில் கடந்த 2018-ம் ஆண்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
சென்னை, திருச்சியில் கள்ளத்துப்பாக்கி வைத்திருந்த சிலர் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். உள்பட பல்வேறு அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாகவும், அந்த இயக்கத்துக்கு நிதி சேர்ப்பதற்காக சட்டவிரோத ஆயுத வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகின.
இவர்கள் தமிழகத்தில் சென்னை, கோவை, திருப்பூரில் முன்னணி அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள், வக்கீல்களுக்கு சட்ட விரோதமாக ஆயுதங்கள் விற்பனை செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதனால் இந்த வழக்குகளை தமிழக போலீசார் நியாயமாக விசாரிக்க வாய்ப்பில்லை. எனவே சென்னை, திருச்சியில் பதிவு செய்யப்பட்டு உள்ள சட்டவிரோத ஆயுத வழக்கு விசாரணையை சி.பி.ஐ. அல்லது தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
பாதுகாப்புக்கு ஆபத்து
இந்த வழக்கை நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணபிரசாத் ஆகியோர் விசாரித்தனர்.
அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, சட்டவிரோத ஆயுத விற்பனை வழக்கை தமிழக போலீசார் சிறப்பாக விசாரித்து வருகின்றனர். மனுதாரர் ஊடகங்களில் வெளியான செய்திகள் அடிப்படையில் மனு தாக்கல் செய்துள்ளார். விசாரணையில் குறைபாடு இருந்ததாக எந்த ஆவணங்களையும் மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யவில்லை. இதனால் விசாரணையை வேறு அமைப்புகளுக்கு மாற்ற வேண்டியதில்லை என தெரிவித்தார்.
முடிவில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
சட்ட விரோத ஆயுதங்கள் பயன்பாடு என்பது நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்தானது. இதை தடுக்க வேண்டும் என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமில்லை. ராணுவத்தில் பயன்படுத்தப்படும் ஆபத்தான ஆயுதங்கள் பொதுமக்களிடம் குறிப்பாக சமூக விரோதிகளிடம் இருக்கக்கூடாது என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என ஆயுத சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
தடுப்பது அவசியம்
சுய பாதுகாப்புக்கு ஆயுதம் வைத்துக்கொள்வதற்கு, உரிய அதிகாரியிடம் லைசென்சு பெற வேண்டும். ஆயுத லைசென்சு வழங்குவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட நபரின் நடத்தை, வழக்குகளை ஆய்வு செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு நிபந்தனைகள் உள்ளன. லைசென்சு பெறாமல் துப்பாக்கிகள் வைத்திருப்பதை முழுமையாக தடுப்பது அவசியம். இந்த வழக்கில் விசாரணை அதிகாரிகள் தாக்கல் செய்த பதில் மனுவில் விசாரணை முறையாக நடைபெறுவதாக கூறப்பட்டுள்ளது. விசாரணை அதிகாரிகள் அறிக்கை திருப்தியாக உள்ளது. இதனால் சென்னை, திருச்சியில் பதிவு செய்யப்பட்ட சட்டவிரோத ஆயுத வழக்கை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்ற வேண்டியதில்லை.
சட்டவிரோத ஆயுத வழக்குகளின் விசாரணையை குறைபாடு இன்றி தமிழக போலீசார் முழுமையாக விரைவில் விசாரிக்க வேண்டும். விழிப்புடனும், கண்காணிப்புடனும் இருந்து சட்டவிரோத ஆயுத பயன்பாட்டை தடுக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.