அடிப்படை பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும்
அடிப்படை பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும்
வீரபாண்டி
திருப்பூர் 4வது மண்டலம், மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நேற்று திருப்பூர் பல வஞ்சிபாளையம் பகுதியில் உள்ள சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது. மாமன்ற கூட்டத்திற்கு 4வது மண்டல தலைவர் இல. பத்மநாதன் தலைமை தாங்கினார். மாநகராட்சி துணை மேயர் பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். 4 வது மண்டல உதவி ஆணையாளர் (பொறுப்பு) செல்வநாயகம் மற்றும் 15 வார்டு மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் வார்டுகளில் உள்ள குறைபாடுகளை மாமன்ற உறுப்பினர்கள் எடுத்துரைத்தனர்.
(54வது வார்டு) பகுதியில் வள்ளலார் நகர் பகுதியில் இருந்து கள்ளங்காடு செல்லும் சாலை வரை இருபுறமும் உள்ள சாக்கடை கால்வாய் மிகக் குறுகலாக உள்ளதால் சாக்கடை கழிவுகள் அடைப்பு ஏற்பட்டு சாலை நடுவே தேக்கமடைகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, தொற்று நோயும் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து காய்ச்சல் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த வார்டு வாரியாக ஆய்வு மேற்கொண்டு சுகாதாரத்தை பாதுகாத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(55 வார்டு) பகுதியில் பாதாள சாக்கடை பணிக்காக சாலை நடுவே உள்ள பாறை உடைக்க வெடி வைக்கப்பட்டது. இதில் பொது மக்களுக்கு முன் அறிவிப்பு எதுவும் இன்றி வெடி வைக்கப்பட்டதில் பாறை வெடித்து பாறை துண்டுகள் சிதறி அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையின் தலையில் சிறு காயம் ஏற்பட்டது.வெடி வைப்பது குறித்து முன்கூட்டியே அப்பகுதி பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும். மேலும் பாதுகாப்பான முறையில் பாறைகளை உடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(29 வார்டு) பகுதியில் சுமார் 150 க்கு மேற்பட்ட இடங்களில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி சாக்கடையில் கலக்கிறது. பலமுறை குடிநீர் பராமரிக்கும் ஊழியர்களிடம் அதிகாரியிடம் தெரிவித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
(28 வார்டு) பகுதியில் காலேஜ் ரோட்டில் இருபுறமும் சாக்கடை கால்வாய் பணிக்காக தோண்டப்பட்ட பணிகள் தற்போது கிடப்பில் உள்ளது. அதனை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் பல்வேறு பகுதிகளில் சுத்திகரிக்கப்பட்ட (ஆரோ வாட்டர்) குடிநீர் மிஷின் பழுதாகி உள்ளது. அதனையும் விரைவாக சரி செய்து விட வேண்டும்.
(42 வார்டு) பகுதியில் தெரு விளக்கு பல இடங்களில் பல நாட்களாக எரியாமல் உள்ளது. தெருவிளக்கு இல்லாததால் இரவு நேரங்களில் வாகனத்தில் வரும் பயணிகள் பலரும் தோண்டப்படும் குழியில் விழுந்து காயம் ஏற்படுகிறது. மேலும் வார்டுகளில் முடிக்கப்படாமல் உள்ள பணிகளுக்காக அதிக நிதியினை ஒதுக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(41 வார்டு) பகுதியில் தொடர்ந்து தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருதல் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பலரும் அச்சம் அடைகின்றனர். தெரு நாய்களை பிடித்தது தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளை ஊழியர்கள் சரிவர அப்புறப்படுத்துவது கிடையாது. இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியின் பாதுகாப்பு சுவர் இடிந்து காணப்படுகிறது. அதனை கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(38 வார்டு) பகுதியில் மங்கலம் சாலையில் இருந்து ஆண்டிபாளையம் குளம் வரை உள்ள தெரு விளக்குகள் எதுவும் சரிவர எரிவதில்லை. இதனால் பொதுமக்கள் பலரும் பாதிக்கப்படுகின்றனர். பல இடங்களில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், வாரம் ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. குடிநீர் குழாய் உடைப்பினை உடனடியாக சரி செய்ய வேண்டும்.
(39 வார்டு) பகுதியில் தார் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அவ்வழியாக செல்லக்கூடிய பள்ளி குழந்தைகள், பணிக்கு செல்லும் பணியாளர்கள், வாகன ஓட்டி என பலரும் பாதிக்கப்படுகின்றனர். இவ்வாறு தெரிவித்தனர்.
மன்ற தலைவர் இல.பத்மநாதன் மற்றும் மாநகராட்சி துணை மேயர் பாலசுப்ரமணியம் ஆகியோர் பேசுகையில் ;-
குடிநீர் பிரச்சனை, தார் சாலை, தெரு விளக்கு, சாக்கடை கால்வாய், திடக்கழிவு மேலாண்மை போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டு தற்போது பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. பணிகளை விரைந்து முடித்திட அதிகாரிகளுக்கும் உத்தரவு விடப்பட்டுள்ளது. மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் ஒன்றிணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். மக்களின் அடிப்படை பிரச்சினையை தீர்த்திட அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும். மண்டல வாரியாக சிறு சிறு பணிகளை விரைந்து முடித்திட, மண்டலத்துக்கு நிதியை அதிகமாக ஒதுக்கிடவும் நடவடிக்கை எடுக்கப்படும்.