15 மனுக்களுக்கு உடனடி தீர்வு
குறைதீர்க்கும் கூட்டத்தில் 15 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.
ஊட்டி,
தமிழ்நாடு போலீஸ் டி.ஜி.பி உத்தரவின்படி, ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடக்கிறது. அதன்படி நேற்று குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது பிரச்சினைகளை மனுக்களாக கொடுத்தனர். இதில் போலீஸ் நிலையங்களில் ஏற்கனவே புகார் அளித்து திருப்தியடையாத மனுதாரர்கள் 30 பேர், புதிதாக மனு கொடுக்க 27 பேர் என 57 பேர் தங்கள் குறைகளை போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரிடம் நேரடியாக தெரிவித்து புகார் மனு அளித்தனர். உடனே அவர் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு இன்ஸ்பெக்டர்களுக்கு உத்தரவிட்டார். இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் கூறும்போது, பல்வேறு சூழ்நிலைகள் காரணமாக எல்லா பிரச்சினைகளுக்கும் போலீஸ் நிலையத்தில் தீர்வு காண முடியாமல் போகிறது. அப்படி இருக்கும் சூழ்நிலையில் குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது குறைகளுக்கு தீர்வு காணலாம். நேற்று நடந்த கூட்டத்தில் 15 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. இதேபோல் போலீசாரும் தங்களது பிரச்சினைகளை மனுவாக அளித்து தீர்வு காணலாம் என்றார்.