டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதிப்பு; வேளாண் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட முதல்-அமைச்சர்..!
விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து உயர் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
சென்னை,
தமிழ்நாட்டில் குறுவை சாகுபடிக்காக கடந்த ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. சரியான காலகட்டத்தில் தண்ணீர் திறக்கப்பட்டாலும் போதுமான அளவு தண்ணீர் வரவில்லை. இதனால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். கடைமடை வரை தேவையான தண்ணீர் சென்றடையாததால் குறுவை சாகுபடிக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தண்ணீரின்றி கருகியதால் குறுவை பயிர்களுக்கு ஏற்பட்ட சேதம் குறித்தும் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவது குறித்தும் உயர் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.
வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, வேளாண்துறை செயலாளர் சமயமூர்த்தி, வேளாண்துறை கமிஷனர் சுப்பிரமணியன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதில் குறுவை சாகுபடியில் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஒரு ஏக்கருக்கு எவ்வளவு தொகை நிவாரணமாக அறிவிக்கலாம் என்று ஆலோசிக்கப்பட்டது. இது தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.மேலும் விவசாயிகளுக்கு நெற்பயிர்களுக்கான இழப்பீடு எவ்வளவு என்பதை விரைவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்து அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது