சுற்றுலா வாகன ஓட்டிகளின் வாழ்வாதாரம் பாதிப்பு
குன்னூரில் ஆட்டோக்கள் விதிகளை மீறி இயங்குவதால், சுற்றுலா வாகன ஓட்டிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க கோரி போலீசில் புகார் அளித்தனர்.
குன்னூர்,
குன்னூரில் ஆட்டோக்கள் விதிகளை மீறி இயங்குவதால், சுற்றுலா வாகன ஓட்டிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க கோரி போலீசில் புகார் அளித்தனர்.
சுற்றுலா வாகன ஓட்டிகள்
நீலகிரி மாவட்டம் சுற்றுலா மாவட்டமாக உள்ளதால், வெளிமாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இவர்களை நம்பி சுற்றுலா வாகன ஓட்டிகள் உள்ளனர். அவர்கள் சுற்றுலா பயணிகளை சுற்றுலா தலங்களுக்கு அழைத்து சென்று, அதன் மூலம் வருமானம் ஈட்டி வருகின்றனர்.
குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களில் கடந்த சில ஆண்டுகளாக சுற்றுலா வாகன தொழில் நலிவடைந்து வருகிறது. இதனால் அவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். தற்போது குன்னூர் தாலுகாவிற்குள் இயங்கி வரும் ஆட்டோக்கள் அரசு விதிகளை மீறியும், அவர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதியை மீறி சுற்றுலா பயணிகளை தலங்களுக்கு அழைத்து செல்வதாக சுற்றுலா வாகன ஓட்டிகள் புகார் கூறுகின்றனர். இதுகுறித்து நேற்று சுற்றுலா டேக்ஸி டிரைவர்கள் அப்பர் குன்னூர், குன்னூர் போலீஸ் நிலையங்களில் புகார் மனு அறித்தனர்.
காப்பாற்ற வேண்டும்
இதுகுறித்து சுற்றுலா வாகன ஓட்டிகள் கூறியதாவது:- சுற்றுலா வாகனங்கள் செல்ல வேண்டிய இடங்களில் எல்லாம் அதிக ஆட்களை ஏற்றிக்கொண்டு ஆட்டோக்கள் செல்கின்றன. இதனால் டேக்ஸி மற்றும் சுற்றுலா கார்கள் முற்றிலும் இயங்காமல், அன்றாட தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாமல் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கிறோம். இதுகுறித்து ஆட்டோ டிரைவர்களிடம் நேரடியாக பல முறை எடுத்து கூறியும், அவர்கள் கேட்பது இல்லை. தகராறில் ஈடுபடுகின்றனர்.
குன்னூர் அனைத்து ஆட்டோ டிரைவர்கள் சங்க நிர்வாகிகளை அழைத்து பேசி, இந்த விஷயத்தில் தக்க நடவடிக்கை எடுத்து டேக்ஸி மற்றும் சுற்றுலா கார் டிரைவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பிட்ட தூரம் மட்டும் செல்வதற்கு ஆட்டோக்களுக்கு அரசு நிர்ணயம் செய்த அனுமதி சீட்டு, வட்டார போக்குவரத்து அலுவலரால் வழங்கப்பட்ட கடிதம் ஆகியவற்றை இணைத்து கொடுத்து உள்ளோம். மேலும் கலெக்டரை சந்தித்து மனு அளிக்க உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.