வானொலி மூலம் இந்தி திணிப்பு: மத்திய அரசு மீது டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டு
வானொலி மூலம் இந்தி திணிப்பு: மத்திய அரசு மீது டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டு.
சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
காரைக்கால் வானொலி நிலையத்தின் பண்பலை வரிசையில் ஒலிபரப்பப்பட்டு வந்த தமிழ் நிகழ்ச்சிகளின் நேரத்தை குறைத்துவிட்டு, தினமும் 4 மணி நேரம் இந்தி நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்பட்டு வருகின்றன. பிரசார் பாரதி நிறுவனத்தின் இந்த அப்பட்டமான இந்தி திணிப்பு கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.
அடுத்தகட்டமாக தமிழ்நாட்டில் தர்மபுரி, நாகர்கோவில் உள்பட இந்தியா முழுவதும் உள்ள 86 உள்ளூர் வானொலி நிலையங்களிலும் இத்தகைய 4 மணி நேர இந்தி நிகழ்ச்சிகள் திணிக்கப்பட கூடும். இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
கல்வியில் தொடங்கி கலாசாரம் வரை அனைத்திலும் இந்தியை திணித்து வரும் மத்திய அரசு, இப்போது வானொலிகள் மூலமாகவும் இந்தியை திணிப்பது நியாயமற்றது. இதை உணர்ந்து கொண்டு காரைக்கால் வானொலியில் 4 மணி நேரம் இந்தி நிகழ்ச்சிகளை ஒலிபரப்புவதை நிறுத்திவிட்டு, வழக்கம்போல தமிழ் நிகழ்ச்சிகளையே ஒலிபரப்ப வேண்டும்.
தர்மபுரி, நாகர்கோவில் போன்ற மற்ற நிலையங்களுக்கு இந்தி நிகழ்ச்சிகளை நீட்டிப்பதையும் பிரசார் பாரதி கைவிட வேண்டும். இல்லாவிட்டால் காரைக்கால் வானொலி நிலையம் முன்பு, அனைத்து தரப்பு மக்களையும் திரட்டி மாபெரும் மக்கள்திரள் போராட்டத்தை பா.ம.க. நடத்தும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.