ஏரியில் வண்டல் மண் கடத்திய வாகனங்கள் சிறைபிடிப்பு


ஏரியில் வண்டல் மண் கடத்திய வாகனங்கள் சிறைபிடிப்பு
x

தண்டராம்பட்டு அருகே ஏரியில் வண்டல் மண் எடுத்துக் கடத்திய வாகனங்களை பொதுமக்கள் சிறைபிடித்தனர். மேலும் நடவடிக்கை எடுக்கக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

தண்டராம்பட்டு

தண்டராம்பட்டு அருகே ஏரியில் வண்டல் மண் எடுத்துக் கடத்திய வாகனங்களை பொதுமக்கள் சிறைபிடித்தனர். மேலும் நடவடிக்கை எடுக்கக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வண்டல் மண் கடத்தல்

தண்டராம்பட்டு அருகில் மஞ்சள்பூண்டி என்ற கிராமத்தில் உள்ள மிகப்பெரிய ஏரி வண்டல் மண் காணப்படுகிறது.

இந்த பகுதியை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஒருவர் நிலத்தில் மண் எடுப்பதற்கு அனுமதிக்கக் கோரி திருவண்ணாமலை தாசில்தாருக்கு விண்ணப்பித்தார்.

அதை தொடர்ந்து நிலத்தில் மண் எடுக்க தாசில்தார் அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது.

இந்த உத்தரவை பயன்படுத்தி சம்பந்தப்பட்ட நபர் தனக்கு சொந்தமான பொக்லைன் எந்திரம் மூலம் ஏரியில் வண்டல் மண்ணை லாரிகளில் ஏற்றி கடத்தி சென்றுள்ளார்.

வாகனங்கள் சிறைபிடிப்பு

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வண்டல் மண் கடத்தப்படும் இடத்திற்கு சென்று தட்டி கேட்டனர். ஆனால் மண் எடுப்பதை அங்கிருந்தவர்கள் நிறுத்தவில்லை. சுமார் 12 அடி ஆழத்திற்கு வண்டல் மண்ணை சுரண்டி எடுத்துள்ளனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் ஏரிப்பகுதியில் இருந்த பொக்லைன் எந்திரம் மற்றும் டிப்பர் லாரிகளை சிறை பிடித்தனர்.

மேலும் திருவண்ணாமலையில் இருந்து தண்டராம்பட்டு செல்லும் பிரதான சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காலை 10.30 மணி அளவில் தொடங்கிய இந்த போராட்டம் சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அரசு அனுமதி ரத்து

இதுகுறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை தாசில்தார் சுரேஷ் மற்றும் தண்டராம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

வண்டல் மண் அள்ளி கடத்தப்பட்ட ஏரியையும் பார்வையிட்டனர்.

அதைச் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபருக்கு வழங்கப்பட்ட அனுமதி ஆணையை தாசில்தார் சம்பவ இடத்திலேயே ரத்து செய்து உத்தரவிட்டார்.

அதன் பின்னர் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story