கணவருக்கு 7 ஆண்டு சிறை
கணவருக்கு 7 ஆண்டு சிறை விதிக்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர்.
அருப்புக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சத்யராஜ்(வயது 36). இவர் டிரைவராக வேலைசெய்து வருகிறார். இவரது மனைவி நந்தினி(27). கடந்த 6.6.2019 அன்று கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது நந்தினி வீட்டில் இருந்த மண்எண்ணெயை தனது உடலில் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக நந்தினியின் தாயார் மீனா கொடுத்த புகாரின்பேரில் அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து நந்தினியை தற்கொலைக்கு தூண்டியதாக சத்யராஜை கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி பகவதி அம்மாள், நந்தினியை தற்கொலைக்கு தூண்டியதாக சத்யராஜூக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.