திடக்கழிவு மேலாண்மை முறைகேடு; மாநகராட்சி குறை தீர்க்கும் கூட்டத்தில் அ.தி.மு.க. மனு


திடக்கழிவு மேலாண்மை முறைகேடு; மாநகராட்சி குறை தீர்க்கும் கூட்டத்தில் அ.தி.மு.க. மனு
x
தினத்தந்தி 20 Sept 2023 1:59 AM IST (Updated: 20 Sept 2023 1:59 AM IST)
t-max-icont-min-icon

திடக்கழிவு மேலாண்மை முறைகேடு குறித்து விசாரிக்க வேண்டும் என்று மாநகராட்சி குறைதீர்க்கும் கூட்டத்தில் அ.தி.மு.க.வினர் மனு அளித்தனர்.

திருநெல்வேலி

நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. மேயர் பி.எம்.சரவணன் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். துணை மேயர் கே.ஆர்.ராஜூ முன்னிலை வகித்தார். இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கினார்கள்.

அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் அரசு வக்கீல் அன்பு அங்கப்பன் தலைமையில் டவுன் பகுதி செயலாளர் காந்தி வெங்கடாசலம் மற்றும் நிர்வாகிகள் மேயரிடம் மனு கொடுத்தனர். அதில் 'நெல்லை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மையை கையாளுவதற்கு தனியார் நிறுவனத்திடம் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. மாமன்றம் அனுமதியின்றி நேரடியாக அனுமதி பெற்றுள்ள நிறுவனம், 700 ஆட்களை தேர்வு செய்தும், போதிய வாகனங்களை கொண்டும் குப்பைகளை அகற்ற வேண்டும். ஆனால் இதையெல்லாம் செய்ததாக தெரியவில்லை. அந்த நிறுவனத்துக்கு கடந்த ஆகஸ்டு மாதம் ரூ.86 லட்சம் வழங்கப்பட்டு உள்ளது. இந்த செப்டம்பர் மாதத்துக்கான தொகையும் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. எனவே இந்த முறைகேடு தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும். லஞ்ச ஒழிப்பு துறை மூலமாகவும் விசாரிக்க வேண்டும்' என்று கூறிஉள்ளனர்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தினர் அளித்த மனுவில், 'சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் நெல்லை டவுனில் நேதாஜி தினசரி சந்தை இடித்துவிட்டு, புதிதாக கட்டப்பட்டு வருகிறது. இந்த சந்தைக்கு மீண்டும் நேதாஜி போஸ் என்று பெயர் வைப்பதுடன், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சிலையும் அமைக்க வேண்டும்' என்று கூறிஇருந்தனர்.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க தலைவர் பெருமாள், செயலாளர் முத்து மணிகண்டன் தலைமையில் நிர்வாகிகள் கொடுத்த மனுவில், 'வண்ணார்பேட்டை சாலைத்தெரு, கம்பராமாயண தெருவில் உள்ள பொது கழிப்பிடம் செயல்பாட்டில் இல்லை. மேலும் மேலப்பாளையம் குறிச்சி 44-வது வார்டு திருநீலகண்ட நாயனார் தெருவில் வீடுகளின் முன்பு தேங்கி நிற்கும் சாக்கடை நீரை அப்புறப்படுத்த வேண்டும்' என்று கூறிஉள்ளனர்.

12-வது வார்டு கவுன்சிலர் கோகுலவாணி சுரேஷ் கொடுத்த மனுவில், 'சிந்துபூந்துறை சாலைத்தெரு முதல் உடையார்பட்டி சாலை வரை பேவர் பிளாக் தளம் அமைக்கும் பணி பாதியில் நிற்கிறது. அந்த பணியை முழுமையாக முடிக்க வேண்டும்' என்று கூறிஉள்ளார். இதேபோல் பல்வேறு பகுதி மக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

முகாமில் மாநகராட்சி துணை ஆணையாளர் தாணுமூர்த்தி, செயற்பொறியாளர் வாசுதேவன், மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா, தச்சநல்லூர் மண்டல உதவி ஆணையாளர் கிறிஸ்டி, நெல்லை மண்டல உதவி ஆணையாளர் வெங்கட்ராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story