தூத்துக்குடி உள்ளிட்ட 3 மாவட்டங்களில்தூண்டில் வளைவு அமைக்கும் பணியை விரைந்து தொடங்க வலியுறுத்தல்
தூத்துக்குடி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் தூண்டில் வளைவு அமைக்கும் பணியை விரைந்து தொடங்க வேண்டும் என்று அகில இந்திய மீனவர் சங்கத்தலைவர் அன்டன் கோமஸ் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் தூண்டில் வளைவு அமைக்கும் பணியை விரைந்து தொடங்க வேண்டும் என்று அகில இந்திய மீனவர் சங்கத்தலைவர் அன்டன் கோமஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தூத்துக்குடியில் அகில இந்திய மீனவர் சங்கத் தலைவர் அன்டன் கோமஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-
உரிமம் புதுப்பிக்கும் முறை
தமிழக சட்டமன்றத்தில் மீன்வளத்துறை மானிய கோரிக்கை நடந்தது. இதில் மீன்பிடி கலன்களுக்கான உரிமம் ஆண்டு தோறும் புதுப்பிக்கும் முறையை தற்போது 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கலாம் என மாற்றியிருப்பது, மீனவர் நலவாரிய உறுப்பினர்கள் இயற்கை மரணத்தின் போது வழங்கப்படும் உரிமை தொகை ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்பட்டது, கடலில் காணாமல் போனோர் குடும்பத்திற்கான உதவித்தொகை நாள் ஒன்றுக்கு ரூ.250-ல் இருந்து ரூ.350 ஆக உயர்த்தி, மாதம் ரூ.10 ஆயிரத்து 500 என உயர்த்தியது உள்ளிட்ட அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது. மீனவர்களுக்கான தடைக்கால நிவாரணம் ரூ.8 ஆயிரமாக உயர்த்தப்படும் என்ற தேர்தல் வாக்குறுதி, ஓய்வூதியம், தொகுப்பு வீடுகள் போன்ற பல கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டு இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது.
தூண்டில் வளைவு
மீன்பிடி துறைமுகங்கள், மீன் இறங்கு தளங்கள், ஏலக்கூடங்கள், உள்கட்டமைப்பு போன்ற அறிவிப்புகள் வரவேற்பதாக இருந்தாலும், தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்பட வேண்டும். கடல் அரிப்பில் இருந்து தங்கள் வாழ்விடம் காக்க மீனவர்கள் போராடும் சூழலில் குமரி மாவட்டம் இரையுமன்துறை, அன்னை நகர், மேலகடியபட்டிணம், ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், மேற்குவாடி, ரோச் மாநகர், தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு, அமலிநகரில் தூண்டில் வளைவு அமைக்க பசுமை தீர்ப்பாய தடைக்கு விலக்கு பெற்று போர் கால அடிப்படையில் பணிகள் தொடங்க வேண்டும்.
மீன் இறங்குதளம்
திருச்செந்தூர் அருகே உள்ள புன்னக்காயலில் மீன் வலைபின்னும் கூடம், ஏலக்கூடம், உட்புற கட்டமைப்பு, சாலை, தண்ணீர் போன்றவற்றுக்காக ரூ.10 கோடி, வீரபாண்டியன்பட்டினம் மற்றும் பெரியதாழை மீன் இறங்கு தளத்துக்கான அறிவிப்பு ஆகியவை வரவேற்கத்தக்கது. மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் தனது தொகுதி மக்களுக்கான பணியில் கூடுதல் சிறப்புடன் செயல்பட்டு உள்ளார். அவருக்கும், தமிழக முதல்-அமைச்சருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.