430 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம்
430 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம்
திருவாரூர் மாவட்டத்தில் 430 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் 1-ந் தேதி நடைபெறுகிறது என கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கிராம சபை கூட்டம்
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 430 கிராம ஊராட்சிகளிலும் உள்ளாட்சிகள் தினமான நவம்பர் 1-ந்தேதி கிராம சபை கூட்டங்கள் நடைபெற உள்ளது. கூட்டத்தில் நவம்பர் 1-ந்நாளினை தமிழகத்தின் உள்ளாட்சிகள் தினமாக கொண்டாட அறிவிப்பு செய்த முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்தல், கிராம ஊராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்களை சிறப்பித்தல், சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் மகளிர் சுய உதவிகுழுக்களை கவுரவித்தல் ஆகியவை நடைபெறுகிறது.
விவாதம்
மேலும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்ட கணக்கெடுப்பு ஜல் ஜீவன் திட்டம், மக்கள் திட்டமிடல் இயக்கம், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை, இணைய வழி வீட்டுவரி, சொத்து வரி செலுத்துதல், மகளிர் சுய உதவிகுழுக்களை உருவாக்குதல் மற்றும் சுழற்சி முறையில் நிர்வாகிகளை மாற்றம் செய்தல், பண்ணை மற்றும் பண்ணை சாரா திட்டங்கள், மக்கள் நிலை ஆய்வு மற்றும் இதர தலைப்புகளின் கீழ் விவாதிக்கப்பட உள்ளது.
கிராம ஊராட்சிகள் அனைத்து நிலைகளிலும் தன்னிறைவை பெறும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறு நடவடிக்கைகள், திட்ட பணிகள் குறித்து விவாதித்து தீர்மானங்கள் நிறைவேற்ற கிராம சபை கூட்டத்தில் அனைத்து தரப்பு பொதுமக்களும் தவறாமல் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவிப்பதோடு தங்கள் ஊராட்சியின் வளர்ச்சியில் தங்கள் பங்களிப்பையும் முழுமையாக வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.