சென்னையில் 2 நாட்கள் நடைபெற்ற திடீர் வாகன சோதனையில் ரூ. 30 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது - காவல்துறை


சென்னையில் 2 நாட்கள் நடைபெற்ற திடீர் வாகன சோதனையில் ரூ. 30 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது - காவல்துறை
x

சென்னையில் 2 நாட்கள் நடைபெற்ற திடீர் வாகன சோதனையில் ரூ. 30 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது.

சென்னை,

சென்னை காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

மோட்டர் வாகன சட்டத்தை திறம்பட அமல்படுத்துவதன் மூலமும், விழிப்புணர்வு பிரச்சாரங்களை ஏற்பாடு செய்வதன் மூலமும் சாலை போக்குவரத்து விபத்துக்களில் ஏற்படும் விபத்து மற்றும் இறப்பு விகிதத்தை குறைக்க சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் கடுமையான முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.

சென்னை பெருநகரத்தில் பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களுக்காக சராசரியாக 6000க்கும் மேற்பட்ட வழக்குகள் தினசரி பதிவு செய்யப்படுகின்றன. இருப்பினும் சில விதிமீறல் செய்பவர்கள் அபராதத்தொகையை சரியான நேரத்தில் செலுத்துவதில்லை.

எனவே 11/04/2022 அன்று பெருநகரத்தில் 10 அழைப்பு மையங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதன் மூலம் கடந்த 2022ம் ஆண்டு விதிகளைமீறி அபராதம் செலுத்தாதவர்களை தொலைபேசியில் அழைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்த விழிப்புணர்வு மூலம் உரிய பதில் கிடைக்காததால் 22.06.2023 மற்றும் 24.06.2023 ஆகிய 2 நாட்களில் 156 இடங்களில் திடீர் வாகன சோதனை நடத்தப்பட்டது. இதில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய 85 வழக்குகள் உட்பட 6,663 வழக்குகள் தீர்வு காணப்பட்டு இணையதளம் வாயிலாக ரூ. 30,82,900 அபராதத் தொகையாக வசூலிக்கப்பட்டது.

மேலும், போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள் தங்களுக்கு நிலுவையில் உள்ள வழக்குகளின் அபராதத் தொகையினை (கிரெடிட்/டெபிட்கார்டு, க்யூஆர் குறியீடு அல்லது ஆன்லைன் பேமெண்ட்) மூலம் அபராதத்தை செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கடந்த ஐந்து மாதங்களில் நிலுவையில் இருந்த 2,06,646 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு சுமார் ரூ. 8,72,83,700 அபராதத் தொகை வசூலிக்கப்பட்டது. போக்குவரத்து விதிகளை மீறியதற்காக அபராதத் தொகை செலுத்துவதை ஒரு துன்புறுத்தல் என்று பாராமல், விழிப்புணர்வு நடவடிக்கை என்பதை பொதுமக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story