தனியார் மதுபான கூடத்தில் திருடிய ஊழியர் கைது
சுசீந்திரம் அருகே தனியார் மதுபான கூட்டத்தில் திருடிய ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
மேலகிருஷ்ணன்புதூர்:
சுசீந்திரம் அருகே தனியார் மதுபான கூட்டத்தில் திருடிய ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
மதுபான கூடத்தில் திருட்டு
நாகர்கோவில் கோட்டார் ஈழவர் சன்னதி தெருவை சேர்ந்தவர் குமரன் என்ற நயினார் குமார் (வயது 53). இவர் சுசீந்திரம் அருகே நல்லூரில் தனியார் மதுபானக்கூடம் நடத்தி வருகிறார். இங்கு மேஜையில் வைத்திருந்த ரூ.94 ஆயிரத்து 406 திடீரென மாயமானது. அதைத்தொடர்ந்து நயினார் குமார் மதுபான கூடத்தில் இருந்த சி.சி.டி.வி. கேமராவின் காட்சி பதிவுகளை ஆய்வு செய்தார். அதில் அங்கு வேலை பார்த்த ஊழியர்கள் பணத்தை திருடியது தெரிய வந்தது.
இதுகுறித்து சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் நெல்லை மாவட்டம் முக்கூடல் தாளார்குளம் பகுதியை சேர்ந்த அந்தோணி சவரி முத்து (45), களக்காடு பகுதியை சேர்ந்த சந்திரன் (44), ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வேப்பன் குளம் பகுதியை சேர்ந்த நம்புவேல் (40) ஆகிய மூன்று பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுகுறித்து சுசீந்திரம் சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி விசாரணை நடத்தி வந்தார். போலீசார் தேடுவதை அறிந்ததும் மூன்று பேரும் தலைமறைவானார்கள்.
ஊழியர் கைது
இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வேப்பன்குளம் பகுதியை சேர்ந்த நம்புவேல் சுசீந்திரம் அருகே நல்லூர் பகுதியில் நிற்பதாக கிடைத்த தகவலின் பேரில் சுசீந்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நம்புவேலை கைது செய்து போலீஸ் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தி, அவரிடம் இருந்த ரூ.25 ஆயிரத்தை மீட்டனர்.
பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.