கோவில்பட்டியில் நடந்த சிறப்பு முகாமில்316 பேருக்கு வேலை உத்தரவு:கூடுதல் கலெக்டர் வழங்கினார்
கோவில்பட்டியில் நடந்த சிறப்பு முகாமில் 316 பேருக்கு வேலை உத்தரவுகளை கூடுதல் கலெக்டர் வழங்கினார்.
கோவில்பட்டி:
கோவில்பட்டியில் நடந்த கலைஞர் நூற்றாண்டு விழா சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் 316 பேருக்கு வேலை உத்தரவுகளை கூடுதல் கலெக்டர் வழங்கினார்.
சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்
கோவில்பட்டி நாடார் மேல்நிலை பள்ளியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நேற்று நடந்தது.
முகாமில் 95 நிறுவனங்கள், 7 திறன் பயிற்சி நிறுவனங்கள் கலந்து கொண்டு நேர்காணல் நடத்தின. 8-ம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரையும், ஐ.டி.ஐ, டிப்ளமோ, நர்சிங், பார்மஸி, பொறியியல் பட்டதாரிகள் என 2 ஆயிரத்து 89 பேர் கலந்து கொண்டனர். இதில் 994 பேர் பெண்கள், 1,095 பேர் ஆண்கள்.
முகாம் ஏற்பாடுகளை மாவட்ட வேலை வாய்ப்பு உதவி இயக்குனர் பேச்சியம்மாள், மகளிர் திட்ட இயக்குனர் வீரபத்திரன், இணை இயக்குனர் சண்முகசுந்தரம், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி சையத் முகமது, நாடார் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜான் கணேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.
நேர்முகத்தேர்வுக்கு தகுதி
முகாமை தூத்துக்குடி கூடுதல் கலெக்டர் தாக்ரே சுபம் ஞானதேவ்ராவ், பயிற்சி துணை கலெக்டர் பிரபு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், இணை இயக்குனர் சண்முகசுந்தரம் ஆகியோர் பார்வையிட்டனர்.
வேலை வாய்ப்பு பெற்ற 181 ஆண்கள், 135 பெண்களுக்கு வேலைவாய்ப்பு உத்தரவுகளை கூடுதல் கலெக்டர் தாக்ரே சுபம் ஞானதேவராவ், கோவில்பட்டி நகரசபை தலைவர் கருணாநிதி, பஞ்சாயத்து யூனியன் தலைவர் கஸ்தூரி சுப்புராஜ் ஆகியோர் வழங்கினா். மேலும், முகாமில் 307 பேர் நேர்முகத் தேர்வுக்கு தகுதிபெற்றனர்.