தோ்ச்சி விகிதத்தை அதிகாிப்பதுடன்மாணவர்கள் இடைநின்றல் இன்றிபள்ளிக்கு வருவதை உறுதி செய்ய வேண்டும்: கல்வித்துறை அலுவலர்களுக்கு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவு
தோ்ச்சி விகிதத்தை அதிகாிப்பதுடன், மாணவர்கள் இடைநின்றல் இன்றி பள்ளிக்கு வருவதை உறுதி செய்ய வேண்டும் என கல்வித்துறை அலுவலர்களுக்கு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
ரூ.15 கோடி நலத்திட்ட உதவிகள்
கடலூர் மாவட்டம் கழுதூரிலய் நேற்று காலை நடந்த தி.மு.க. இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட தி.மு.க. இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மாலையில் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது கலெக்டர் அலுவலக வளாகத்தில் வேளாண் துறை, தோட்டக்கலைத்துறை, காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து காட்சிப்படுத்தப்பட்ட அரங்குகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார்.
இதில் காவல்துறை சார்பில் பல்வேறு வகையிலான துப்பாக்கிகள் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தது அனைவரையும் கவர்ந்தது. தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் 100 அடி உயரத்திற்கு தேசிய கொடி கம்பம் அமைப்பதற்காக அடிக்கல் நாட்டினார். பின்னர் இளம்பெண்கள் அத்தப்பூ கோலமிட்டு நடனமாடியதை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார். தொடர்ந்து வருவாய்த்துறை, வேளாண் துறை, மத்திய கூட்டுறவு வங்கி, மக்கள் நல்வாழ்வுத்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் 909 பயனாளிகளுக்கு ரூ.15 கோடியே 5 லட்சத்து 10 ஆயிரத்து 397 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
ஆய்வுக்கூட்டம்
இதையடுத்து கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு துறை சார்ந்த வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார். வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் வரவேற்றார்.
கூட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், கடலூர் மாவட்டம் அதிக கிராம பகுதிகளை கொண்ட மாவட்டம். இதில் கல்வியில் பின்தங்கிய மாவட்டமாக கடலூர் இருப்பது வேதனை அளிக்கிறது. அதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க துறை சார்ந்த அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் மாணவர்களின் இடைநின்றல் குறித்து ஆய்வு செய்து, மாணவர்கள் இடைநின்றல் இன்றி பள்ளிக்கு வருவதை கல்வித்துறை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றார். இதில் அரசு செயலாளர் (சிறப்பு திட்ட செயலாக்கத்துறை) டேரேஸ் அகமது, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மதுபாலன், எம்.எல்.ஏ.க்கள் சபா. ராஜேந்திரன், அய்யப்பன், ராதாகிருஷ்ணன், சிந்தனை செல்வன், மாநகராட்சி மேயர் சுந்தரி, துணை மேயர் தாமரைச்செல்வன், போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் மற்றும் அனைத்து துறை அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.