வேளாண் விரிவாக்க மையங்களில் 23 ஆயிரம் டன் உரம் இருப்புகலெக்டர் ராஜகோபால் சுன்கரா தகவல்


வேளாண் விரிவாக்க மையங்களில் 23 ஆயிரம் டன் உரம் இருப்புகலெக்டர் ராஜகோபால் சுன்கரா தகவல்
x

வேளாண் விரிவாக்க மையங்களில் 23 ஆயிரம் டன் உரம் இருப்பதாக கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தகவல் தொிவித்தாா்

ஈரோடு

வேளாண் விரிவாக்க மையங்களில் 23 ஆயிரம் டன் உரம் இருப்பு வைக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

விதை -உரம் இருப்பு

ஈரோடு மாவட்டத்தின் இயல்பான ஆண்டு சராசரி மழை அளவு 733.44 மில்லி மீட்டர் ஆகும். நடப்பு ஆண்டில் இதுவரை 274.95 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தற்போது 78.69 அடியாகவும், 15 டி.எம்.சி நீர் இருப்பும் உள்ளது.

நடப்பாண்டில் வேளாண் விரிவாக்க மையங்களில் வினியோகம் செய்வதற்காக நெல் விதைகள் 147 டன்னும், சிறுதானியங்கள் 18 டன்னும், பயறு வகைகள் 3 டன்னும், எண்ணெய் வித்துக்கள் 21 டன்னும் என மொத்தம் 189 டன் விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. ரசாயன உரங்களான யூரியா 4 ஆயிரத்து 121 டன்னும், டி.எ.பி 3 ஆயிரத்து 790 டன்னும், பொட்டாஷ் 3 ஆயிரத்து 436 டன்னும், காம்ப்ளக்ஸ் 11 ஆயிரத்து 729 டன்னும் என மொத்தம் 23 ஆயிரத்து 76 டன் உரம் இருப்பில் உள்ளது. நடப்பு பருவத்திற்கு தேவையான இடுபொருட்கள் போதுமான அளவு இருப்பில் உள்ளன.

நிலத்தடிநீர் ஆய்வு

2022- 2023-ம் ஆண்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டமானது தேர்வு செய்யப்பட்ட 42 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டன. இந்த ஊராட்சிகளில் உள்ள தரிசு நிலங்கள் கண்டறியப்பட்டு அவற்றை சாகுபடிக்கு கொண்டு வந்து தானிய உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

வேளாண்மைத்துறையின் மூலம் தரிசு நிலத்தொகுப்புகள் கண்டறியப்பட்டு அவற்றில் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கும் பொருட்டு நிலத்தடிநீர் ஆய்வு செய்யப்பட்டு ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து, நுண்ணீர் பாசன அமைப்பை நிறுவி பயிர்சாகுபடிக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

வேளாண் கண்காட்சி

தடப்பள்ளி அரக்கன்கோட்டை ஆயக்கட்டு பாசன பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட நெல் வளர்ச்சி பருவத்தில் உள்ளதால் பூச்சிநோய் தாக்குதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே வேளாண்மைத்துறை களப்பணியாளர்கள் வயல்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து பாதிப்பு ஏதேனும் இருந்தால் பூச்சிநோய் கட்டுப்பாடு முறைகளை விவசாயிகளுக்கு பரிந்துரை செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். பி.எம்.கிசான் திட்டத்தில் ஆதார் விவரங்களை சரிபார்த்து உறுதி செய்தால் மட்டுமே அடுத்த தவணைத்தொகை பெற முடியும்.

வேளாண் சங்கமம் என்ற தலைப்பில் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் வருகிற 27, 28, 29-ந்தேதி ஆகிய 3 நாட்கள் திருச்சியில் உள்ள கேர் என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியில் 300-க்கும் மேற்பட்ட வேளாண் தொழில்நுட்பங்கள் சார்ந்த கண்காட்சி அரங்குகள் மற்றும் விவசாயிகள், வேளாண் விஞ்ஞானிகள் கலந்துரையாடல் ஆகியன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. எனவே விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.


Next Story