விவசாய நிலங்களில் பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த துரைவைகோ கோரிக்கை
தூத்துக்குடிமாவட்டத்தில் விவசாய நிலங்களில் பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த துரைவைகோ கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.
விவசாய நிலங்களில் பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி ம.தி.மு.க. தலைமை கழக செயலாளர் துரை வைகோ விவசாயிகளுடன் ஊர்வலமாக சென்று கலெக்டரிடம் மனு கொடுத்தார்.
மனு
தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகளுடன் ம.தி.மு.க. தலைமை கழக செயலாளர் துரை வைகோ நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அவர் விவசாயிகளுடன் தூத்துக்குடி-பாளையங்கோட்டை மெயின் ரோட்டில் இருந்து ஊர்வலமாக சென்று கலெக்டர் செந்தில்ராஜை சந்தித்து மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்திலும் காட்டுப் பன்றிகளால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஏற்கனவே, காலநிலை மாற்றம், உரம் விலை உயர்வு போன்ற பல்வேறு காரணங்களால் விவசாயிகள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
முன்அனுமதி
தி.மு.க அரசு விவசாயிகள் மற்றும் விவசாயப் பயிர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் காட்டுப் பன்றிகளின் தாக்கம் குறித்து ஆராய வனத்துறைக்குள் ஒரு குழுவை அமைத்திருப்பதாக தெரிகிறது. வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972, அட்டவணை 3-ன் கீழ் இருக்கும் காட்டுப் பன்றிகளை, அட்டவணை 5-ல் இருக்கும் உயிரினங்கள் பட்டியலில் கொண்டுவர வேண்டும். அப்போது தான், காட்டுப் பன்றிகளை அழித்து கட்டுப்படுத்துவதற்கு அரசின் முன் அனுமதி தேவையில்லை.
எனவே, விவசாயிகளுக்கும், விவசாயப் பயிர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் காட்டுப் பன்றிகளை அழிக்க கேரள அரசைப் போல உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரத்தைக் கொடுக்க வேண்டும். கிராமக் குழுக்களை ஏற்படுத்தி குறைந்தபட்சம் அதன் மூலமாக நடவடிக்கைகள் எடுக்க முயற்சிக்க வேண்டும். மேலும், காட்டுப் பன்றிகளை வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972, அட்டவணை 5-ல் இருக்கும் உயிரினங்கள் பட்டியலில் கொண்டுவர மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது.
கோவில்பட்டி
கோவில்பட்டியிலுள்ள தனியார்திருமண மகாலில்
தூத்துக்குடி மாவட்ட ம.தி.மு.க. சார்பில் விவசாயிகளுடன் ஆலோசனை நடந்தது. கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ் தலைமை தாங்கினார். மாநில துணை பொதுச் செயலாளர் தி.மு.ராஜேந்திரன், மாவட்ட இளைஞரணி செயலாளர் விநாயகா ஜி.ரமேஷ், நகர செயலாளர் எஸ்.பால்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், மதிமுக தலைமை கழகச் செயலாளர் துரை வைகோ கலந்து கொண்டு, விவசாயிகளுடன் ஆலோசனை நடத்தி, அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
கூட்டத்தில் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் பரமசிவம் தலைமையில் தீப்பெட்டி சங்க நிர்வாகிகள், தொழிலில் உள்ள பிரச்சினைகள் குறித்து கோரிக்கை மனு கொடுத்தனர். கூட்டத்தில், கட்சி நிர்வாகிகள் மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.