திருமணம் நடக்க இருந்த நாளில் விபத்தில் மணமகன் பலி
தூத்துக்குடியில் திருமணம் நடக்க இருந்த நாளில் மணமகன் வாகனம் மோதி பலியானார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.
ஸ்பிக் நகர்:
தூத்துக்குடியில் திருமணம் நடக்க இருந்த நாளில் மணமகன் வாகனம் மோதி பலியானார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.
உப்பள தொழிலாளி
தூத்துக்குடி முள்ளக்காட்டை அடுத்த பொட்டல்காடு தெற்கு தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவருடைய மகன் ஜெகதீஷ் (வயது 27). இவர் அங்குள்ள உப்பள நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
இவருக்கும், பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் நேற்று காலையில் திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
வாகனம் மோதி பலி
இந்த நிலையில் நேற்று காலையில் மணமகன் ஜெகதீஷ் தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் வெளியில் புறப்பட்டு சென்றார். காலை 7 மணியளவில் தூத்துக்குடி துறைமுகம்- மதுரை பைபாஸ் ரோடு உப்பாற்று ஓடை பாலம் அருகில் உள்ள சர்வீஸ் ரோட்டில் பெட்ரோல் பங்க் அருகில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் திடீரென்று மோட்டார் சைக்கிளின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் சாலையில் தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயமடைந்த ஜெகதீஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
போலீசார் விசாரணை
அந்த வழியாக சென்றவர்கள் இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து முத்தையாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, இறந்த ஜெகதீஷின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நிகழ்ந்த இடம் அருகில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை பார்வையிட்டு, விபத்து ஏற்படுத்திய வாகன டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
சாவில் சந்தேகம் இருப்பதாக புகார்
இதற்கிடையே, ஜெகதீஷின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி, முத்தையாபுரம் போலீஸ் நிலையத்துக்கு உறவினர்கள் திரண்டு சென்று புகார் தெரிவித்தனர். இதுதொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்வதாக போலீசார் உறுதி அளித்ததின்பேரில், அவர்கள் கலைந்து சென்றனர்.
திருமண கோலத்தில் காண வேண்டிய மகனை பிணக்கோலத்தில் பார்த்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது. தூத்துக்குடியில் திருமணம் நடக்க இருந்த நாளில் வாகனம் மோதி மணமகன் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.