சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதியில் 2 கேமரா பொருத்தி கண்காணிப்பு
தக்கலை அருகே சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதியில் 2 கண்காணிப்பு கேமராக்களை வனத்துறையினர் பொருத்தி கண்காணித்து வருகிறார்கள்.
தக்கலை:
தக்கலை அருகே சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதியில் 2 கண்காணிப்பு கேமராக்களை வனத்துறையினர் பொருத்தி கண்காணித்து வருகிறார்கள்.
சிறுத்தை நடமாட்டம்
தக்கலை அருகே உள்ள வேளிமலை வனப்பகுதியில் தனியார் ரப்பர் தோட்டங்கள் உள்ளன. இந்த ரப்பர் தோட்டத்துக்கு தொழிலாளர்கள் பால் வெட்ட செல்வது வழக்கம். இந்த நிலையில் சரல்விளை பகுதியை சேர்ந்த சுரேஷ் (வயது 35) சில நாட்களுக்கு முன்பு ரப்பர் பால் வெட்டுவதற்காக நரிச்சிக்கல் பகுதிக்கு சென்ற போது முள்ளம்பன்றியை ஒரு விலங்கு கடித்து தின்றது. அந்த பகுதியில் டார்ச் லைட் அடித்து பார்த்த போது சிறுத்தையின் உருவம் தெரிந்துள்ளது. இதுபற்றி அவர் ஊரில் வந்து கூறினார்.
இதே போல் நேற்று முன்தினம் சரல்விளை பகுதியை சேர்ந்த ஹெலன்மேரி (40) குழிவிளை பகுதியில் ரப்பர் பால் வெட்ட சென்ற போது 3 குட்டிகளுடன் சிறுத்தை சென்றதை பார்த்து ஊரில் உள்ளவர்களிடம் தெரிவித்தார். இந்த தகவல்கள் மூலம் சிறுத்தை இருப்பது உறுதியாகி உள்ளது. இதனால் சிறுத்தை எப்போது வேண்டுமானாலும் இரை தேடி ஊருக்குள் வரலாம் என மக்கள் அச்சத்துடன் காணப்படுகின்றனர். எனவே வனத்துறை உடனடியாக சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
கண்காணிப்பு கேமரா
அதைத்தொடர்ந்து வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தனர். சிறுத்தை நடமாட்டம் உள்ளதா? என்பதை கண்காணிக்க கண்காணிப்பு கேமரா பொருத்த மாவட்ட வனத்துறை அதிகாரி இளையராஜா உத்தரவிட்டார்.
அதன்படி நேற்று மதியம் வேளிமலை வனசரக அலுவலர் அதியமான் தலைமையில் முள்ளம்பன்றியை சிறுத்தை தின்றுபோட்டிருந்த நரிச்சிக்கல் பகுதியில் 2 இடங்களில் ரப்பர் மரத்தின் கீழ்பகுதியில் 2 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தினார்கள். அதைத்தொடர்ந்து வனகாப்பாளர் கிருஷ்ணன் குட்டி, வேட்டை தடுப்பு காவலர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் தினமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளதாகவும், சிறுத்தையின் நடமாட்டம் கேமராவில் பதிவானால் உடனே கூண்டு வைத்து பிடிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வனத்துறை அதிகாரி தெரிவித்தார்.