அந்தியூரில் அரசு டாக்டரை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு; பொதுமக்கள் சாலை மறியல்
பொதுமக்கள் சாலை மறியல்
அந்தியூர் அருகே உள்ள எண்ணமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உதவி மருத்துவராக டாக்டர் சரவணபிரபு கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இவர் தற்காலிகமாக அந்தியூர் அருகே உள்ள சின்னத்தம்பிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இந்தநிலையில் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவத்து, டாக்டர் சரவணபிரபு எண்ணமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் எனக்கோரி எண்ணமங்கலம், கோவிலூர், மூலக்கடை, செல்லம்பாளையம், மூங்கில்பாளையம் கிராமங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் எண்ணமங்கலம் பஸ் நிறுத்தத்தில் நேற்று மாலை 4.30 மணி அளவில் கூடி திடீரென அங்கு சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.
தகவல் அறிந்ததும் அந்தியூர் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ், வெள்ளித்திருப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
மேலும் மருத்துவத்துறை அதிகாரிகளையும் வரவழைத்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
உங்களது கோரிக்கைகளை மனுவாக எழுதி கொடுங்கள் மருத்துவ துறை உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கறோம் என்றார்கள். இதை ஏற்றுக்ெகாண்டு சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றார்கள்.