தூத்துக்குடி மாநகராட்சியுடன்இணைக்கப்பட்ட பகுதிகளில்ரூ.137¾ கோடியில் பாதாள சாக்கடை திட்டம்


தூத்துக்குடி மாநகராட்சியுடன்இணைக்கப்பட்ட பகுதிகளில்ரூ.137¾ கோடியில் பாதாள சாக்கடை திட்டம்
x

தூத்துக்குடி மாநகராட்சியுடன்இணைக்கப்பட்ட பகுதிகளில் ரூ.137¾ கோடியில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளில் ரூ.137¾ கோடி செலவில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாநகராட்சி கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் நேற்று மாநகராட்சி கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கினார். ஆணையாளர் தினேஷ்குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாநகராட்சிக்கு உட்பட்ட அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை கூடுதலாக 10 பள்ளிக்கூடங்களுக்கு விரிவுபடுத்துவது, தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இணைக்கப்பட்ட மற்றும் விடுபட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் ரூ.137 கோடியே 71 லட்சம் மதிப்பில் மேற்கொள்ள அனுமதி வழங்குவது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தண்ணீர் வினியோகம்

கூட்டத்தில் மாநகராட்சி கவுன்சிலர்கள் பேசும் போது, மாநகராட்சி பகுதியில் டெங்கு பிரச்சினை ஏற்படாமல் தடுக்க வேண்டும், ஆவின் பால் தட்டுப்பாடு இன்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 9-வது வார்டு பகுதியில் நாய் தொல்லை அதிகமாக உள்ளது. அதனை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு அதிகாரிகளுக்கு மாநகராட்சி சார்பில் டேங்கர் லாரிகளில் தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. ஆனால் சிறிய கோவில்களில் அன்னதானம் போன்றவற்றுக்கு பணம் செலுத்தினால்தான் தண்ணீர் வழங்கப்படுகிறது. ஆகையால் கோவில்களுக்கு இலவசமாக தண்ணீர் வழங்க வேண்டும். லெவிஞ்சிபுரம் பகுதியில் பாதாள சாக்கடை திட்டம், குடிநீர் குழாய் திட்ட பணிகள் முடிவடைந்த பிறகு சாலை அமைக்க வேண்டும். குப்பை அள்ளுவதற்கு போதுமான வாகனங்கள் இல்லை. அதனை சரிசெய்ய வேண்டும் என்று கூறினர்.

70 ஆயிரம்

கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி கூறியதாவது:-

மாநகராட்சி பகுதியில் உள்ள 10 பள்ளிக்கூடங்களுக்கு கூடுதலாக காலை சிற்றுண்டி வழங்கப்பட உள்ளது. மாநகராட்சி கவுன்சிலர்கள் பதவியேற்று வருகிற 4-ந் தேதி ஓராண்டு நிறைவு பெறுகிறது. இதனை முன்னிட்டும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டும் 70 ஆயிரம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளன. இதில் முதல்கட்டமாக நாளை (அதாவது இன்று) 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்படும்.

இதேபோன்று மாநகராட்சி பகுதியில் பல்வேறு புதிய பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஆக்கிரமிப்பில் இருந்த பூங்காக்களும் மீட்கப்பட்டு உள்ளன. தருவைகுளம் குப்பை கிடங்குக்கு பின்புறம் கடற்கரை வரை சுத்தம் செய்யப்படும். மடத்தூர் முதல் கடற்கரை வரை சாலை அமைக்கப்படுகிறது. இந்த பணிகள் 75 சதவீதம் முடிவடைந்துள்ளது.

டெங்கு கொசுப்புழு ஒழிப்பு

மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணியாளர்கள் 300 பேர் உள்ளனர். தினமும் 150 பேர் வீடு, வீடாக சென்று டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். அதேபோன்று காய்ச்சல் உள்ளதா? என்பதையும் ஆய்வு செய்கின்றனர். ஒரு பகுதியில் அதிகமாக காய்ச்சல் தென்பட்டால், அங்கு மருத்துவ முகாம் நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. டேங்கர் லாரிகள் மூலம் தனிநபருக்கு தண்ணீர் வழங்கப்படவில்லை. மாநகராட்சியை பசுமையாக மாற்ற வேண்டும் என்பதற்காக செடிகளுக்கு மட்டும் தண்ணீர் ஊற்றப்படுகிறது. அதனை தவறாக பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும். புதிதாக போடப்பட்டுள்ள கருப்பு நிற குடிநீர் குழாயில் தண்ணீர் திறந்து விட்டு பரிசோதனை நடத்த அறிவுறுத்தி உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையர் குமார், மாநகர என்ஜினீயர் (பொறுப்பு) சரவணன், மாநகராட்சி உதவி என்ஜினீயர் பிரின்ஸ், மாநகர நல அலுவலர்கள் ஸ்டாலின் பாக்கியநாதன் (துப்புரவு பணி), தினேஷ் (மருத்துவம்) மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story