அரியலூர் மாவட்டத்தில், கடந்த 4 மாதங்களில் 27 இருசக்கர வாகன விபத்துகளில் 22 பேர் சாவு
அரியலூர் மாவட்டத்தில், கடந்த 4 மாதங்களில் 27 இருசக்கர வாகன விபத்துகளில் 22 பேர் உயிரிழந்தனர்.
தாமரைக்குளம்:
22 பேர் சாவு
அரியலூர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையிலான கால கட்டத்தில் அதிவேகம், மது போதை, அஜாக்கிரதை மற்றும் கவன குறைவு காரணமாக இதுவரை 27 இருசக்கர வாகன விபத்துகள் நடைபெற்றுள்ளன. இதில் 21 விபத்துகளில் அதிவேகம் மற்றும் வாகனம் கட்டுப்பாடின்றி தானாக கீழே விழுந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆகும். மீதமுள்ள 6 விபத்துகளில் சிக்கியவர்கள் காயம் மற்றும் படுகாயம் அடைந்தனர்.
அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின்படி போக்குவரத்து போலீசார் அரியலூர் மாவட்டத்தை விபத்தில்லா மாவட்டமாக மாற்றும் வகையில் பல்வேறு போக்குவரத்து சீர் நடவடிக்கைகள், வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பொதுமக்களிடையே போக்குவரத்து விதிகள் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
சாலை விதிகளை...
எனவே பொதுமக்கள் இருசக்கர வாகனத்தை இயக்கும்போது ஹெல்மெட் அணிந்து, சாலை விதிகளை முறையாக பின்பற்றி பாதுகாப்பாக பயணிக்குமாறும், அரியலூர் மாவட்டத்தை விபத்தில்லா மாவட்டமாக மாற்ற போலீசாருக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று அரியலூர் மாவட்ட போலீசார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.