ஆசனூர் பகுதியில் காட்டுயானை தாக்கி 3 பேர் படுகாயம்
ஆசனூர் பகுதியில் காட்டு யானை தாக்கி 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
தாளவாடி
ஆசனூர் பகுதியில் காட்டு யானை தாக்கி 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
தொழிலாளி படுகாயம்
தாளவாடி ஆசனூர் அருகே உள்ள ஒங்கல்வாடி கிராமத்தைச் சேர்ந்தவர் பசுபதி (வயது 27). இவர் அரேபாளையம் பகுதியில் உள்ள பேக்கரியில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். பசுபதி நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் வேலையை முடித்துவிட்டு ஒங்கல்வாடி கிராமத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த காட்டு யானை பசுபதியை தாக்கியது.
இதில் படுகாயம் அடைந்த அவர் யானையிடம் இருந்து தப்பி தனது உறவினர்களிடம் கூறினார். அதைத்தொடர்ந்து அவரை வனத்துறை வாகனத்தின் மூலம் சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து ஆசனூர் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் 2 பேர்
இதேபோல் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு் யானை பழைய ஆசனூர் கிராமத்தில் நுழைந்தது. இதை பார்த்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது ஆவேசமடைந்த யானை அவர்களை துரத்தியது. இதில் ரவிக்குமார், சிவக்குமார் ஆகியோரை யானை தாக்கியது. இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனே பொதுமக்கள் சத்தம் போடவே யானை அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றது.
பின்னர் படுகாயம் அடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.