பங்களாப்புதூரில் 13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்; தொழிலாளிக்கு 20 ஆண்டு ஜெயில்


பங்களாப்புதூரில்  13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்; தொழிலாளிக்கு 20 ஆண்டு ஜெயில்
x

தொழிலாளிக்கு 20 ஆண்டு ஜெயில்

ஈரோடு

பங்களாப்புதூரில் 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து ஈரோடு கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

பாலியல் பலாத்காரம்

பங்களாப்புதூர் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல். இவருடைய மகன் நஞ்சுண்டன் (வயது 22). கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் 24-ந் தேதி, ஒரு வீட்டில் சிறுமி தனியாக இருப்பதை அறிந்து கொண்டு அந்த வீட்டுக்குள் நுழைந்து உள்ளார். பிறகு கதவை உள்தாழ்ப்பாள் போட்டுவிட்டு அந்த சிறுமியை நஞ்சுண்டன் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். பின்னர் அங்கிருந்து அவர் தப்பி சென்றார்.

இதுபற்றிய தகவல் தெரிய வந்ததும் சிறுமியின் பெற்றோர் பங்களாப்புதூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், நஞ்சுண்டனை கைது செய்தனர். மேலும் அவர் மீது ஈரோடு மகளிர் கோர்ட்டில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.

20 ஆண்டு ஜெயில்

இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி மாலதி நேற்று தீர்ப்பு கூறினார்.

அதில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக நஞ்சுண்டனுக்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதத்தை செலுத்த தவறினால் கூடுதலாக 3 மாதம் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் ஒரு மாதத்துக்குள் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு நீதிபதி மாலதி பரிந்துரை செய்தார். இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வக்கீல் ஜெயந்தி ஆஜரானார்.


Next Story