பவானிசாகரில் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டம் - மீன்கள் கிடைக்காமல் பொதுமக்கள் அவதி
பவானிசாகரில் நடைபெறும் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தால் மீன்கள் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டனா்.
பவானிசாகரில் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் மீன்கள் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
தனியாருக்கு ஏலம்
தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத்தின் சார்பில் பவானிசாகர் அணையில் இருந்து மீன் பிடித்து பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நடைமுறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டது.
அதன்படி மீன் பிடித்து விற்கும் உரிமை தனியாருக்கு ஏலம் விடப்பட்டது. தமிழ்நாடு மீன்வளத் துறையின் அரசு பங்கு மீனவர்களை பயன்படுத்த வேண்டும் என்ற விதிமுறைப்படி தனியாருக்கு ஏலம் விடப்பட்டிருந்தது. நேற்று முன்தினத்துடன் தனியார் ஏலம் எடுத்த காலம் முடிவடைந்தது.
வேலை நிறுத்த போராட்டம்
இந்த நிலையில் அரசு பங்கு மீனவர்கள் கூட்டுறவு சங்கத்துக்குத்தான் மீன் பிடித்து விற்கும் உரிமையை வழங்க வேண்டும். தனியாருக்கு ஏலம் விடக்கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என மீனவர்கள் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி நேற்று காலை முதல் மீன் பிடிக்காமல் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பவானிசாகர் அணையில் இருந்து அணையின் நீர்த்தேக்க பகுதியான சிறுமுகை வரை மொத்தம் 622 பங்கு மீனவர்கள் பரிசலில் மீன்பிடிக்க செல்லவில்லை. மேலும் தனியார் ஏலம் முடிவடைந்த காரணத்தினாலும் நேற்று பவானிசாகர் அணையில் மீன் பிடிக்க யாரும் செல்லவில்லை. இதன்காரணமாக அணையின் ஓரத்தில் பரிசல்கள் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்தன.
இதனால் மீன் கிடைக்காமல் பவானிசாகர் அணை முன்பு உள்ள வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.