கடலூரில் பட்டப்பகலில் துணிகரம் மூதாட்டியிடம் செல்போன் பறித்த சிறுவர்கள் பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்
கடலூர் கூத்தப்பாக்கத்தில் மூதாட்டியிடம் 2 சிறுவர்கள் செல்போன் பறித்துள்ளனர். இதில் ஒரு சிறுவனை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர்.
திருப்பாதிரிப்புலியூர்,
கடலூர் கூத்தப்பாக்கம் வங்கி ஊழியர் நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் மனைவி புஷ்பா (வயது 75). இவர் நேற்று காலை அருகில் உள்ள கடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி நடந்து வந்து கொண்டிருந்தார். வள்ளலார் நகரில் உள்ள குடிநீர் தொட்டி அருகில் வந்த போது, 15 வயது மதிக்கத்தக்க 2 சிறுவர்கள் புஷ்பாவை பின்தொடர்ந்து சென்றனர். இந்நிலையில் சிறுவர்கள் 2 பேரும் திடீரென புஷ்பாவை வழிமறித்தனர். பின்னர் அவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் புஷ்பாவிடம் இருந்த செல்போனை பறித்தனர். இதில் பதறிய அவர் திருடன் திருடன் என கூச்சலிட்டார். இந்த சத்தம் கேட்ட அப்பகுதி மக்கள் திரண்டு வந்தனர்.
ஆட்டோவில் தப்பிய சிறுவன்
இதனால் அதிர்ச்சியடைந்த 2 சிறுவர்களும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். இதில் ஒரு சிறுவன், அவ்வழியாக வந்த ஆட்டோவில் ஏறி தப்பி சென்று விட்டான். மற்றொரு சிறுவனை அப்பகுதி மக்கள் மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்கள், இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் விரைந்து வந்து, பிடிபட்ட சிறுவனை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவன் கடலூர் அருகே உள்ள கீரப்பாளையத்தை சேர்ந்தவன் என்பதும், கடலூரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்ததும் தெரியவந்தது.
விசாரணை
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த சிறுவனை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய சிறுவன் யார்?, எந்த ஊரைச் சேர்ந்தவன்?, என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களாக நள்ளிரவில் தனியாக செல்பவர்களை குறி வைத்து மர்மநபர்கள் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், நேற்று பட்டப்பகலில் மூதாட்டியிடம் சிறுவர்கள் செல்போன் பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.