புதூரில் வட்டார வேளாண் விரிவாக்க அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை
புதூரில் வட்டார வேளாண் விரிவாக்க அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
எட்டயபுரம்:
கனமழையால் பாதிக்கப்பட்ட மிளகாய் சாகுபடி விவசாயிகளுக்கு காப்பீடு வழங்க வலியுறுத்தி நேற்று புதூர் வட்டார வேளாண்மை விரிவாக்க அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
விவசாயிகள் முற்றுகை
விளாத்திகுளம் அருகேயுள்ள புதூரிலுள்ள வட்டார வேளாண்மை விரிவாக அலுவலகத்துக்கு நேற்று கரிசல்பூமி விவசாயிகள் சங்கத்தினர் திரண்டு வந்தனர். அங்கு அலுலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு விவசாயிகள் சங்கத்தலைவர் வரதராஜன் தலைமை தாங்கினார். இதில் வட்டார தலைவர் சேதுபாண்டி, விவசாய சங்க நிர்வாகிகள் ஆதிமூலம், சுந்தர், வேலுச்சாமி, பால்ராஜ், பால்ச்சாமி, பிரசாத், பெருமாள்சாமி, சூரங்குடி முன்னாள் ஊராட்சி தலைவர் சாத்தையா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
மிளகாய் பயிருக்கு காப்பீடு
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2020-2021 சுமார் ஒரு லட்சத்து எழுபதாயிரம் எக்டேர் மானாவாரி விவசாய நிலங்களில் உளுந்து, பாசி, கம்பு, மக்கா, சூரியகாந்தி, கொத்தமல்லி, வெங்காயம், மிளகாய் போன்ற பல்வேறு பயிர்கள் பயிரிட்டனர். அனைத்து பயிர்களுக்கும் காப்பீடு செய்யப்பட்டது. இந்த நிலையில் கனமழை காரணமாக பயிர்களின் மகசூல் கடுமையாக பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட விவசாயிகள் பயிர் காப்பீடு இழப்பீடு கேட்டு பல்வேறு போராட்டம் நடத்தினர். பெரும்பாலான பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் மிளகாய் பயிருக்கு காப்பீடு வழங்கப்படவில்லை. இதனால் மிளகாய் சாகுபடி விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். உடனடியாக பாதிக்கப்பட்ட மிளகாய் சாகுபடி விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.
வேளாண் அதிகாரி உறுதி
முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் வேளாண்மை உதவி இயக்குனர் சின்னப்பொன்னு பேச்சுவார்த்தை நடத்தினார். ஓரிரு நாட்களில் பாதிக்கப்பட்ட மிளகாய் பயிர் சாகுபடி விவசாயிகளுக்கு காப்பீடு தொகை வழங்கப்படும் என வேளாண்மை உதவி இயக்குனர் உறுதியளித்தார். இதை ஏற்றுக்கொண்ட விவசாயிகள் அனைவரும் கலைந்து சென்றனர்.