விபத்து வழக்கில் கூலித்தொழிலாளிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை
விபத்து வழக்கில் கூலித்தொழிலாளிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
கடத்தூர்
கோபி அருகே உள்ள வடக்கு மோதூரை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 50). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 27-2-2015-ம் ஆண்டு சத்தி ரோடு மோதூர் பிரிவில் தனது நண்பர் ஆறுமுகம் என்பவருடன் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கொடுமுடியை சேர்ந்த கூலித்தொழிலாளியான மணிமுத்து என்பவர் ஓட்டி வந்த காரானது மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இதில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பழனிசாமி இறந்தார். இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிமுத்துவை கைது செய்து கோபி முதலாம் வகுப்பு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை மாஜிஸ்திரேட்டு விஜய் அழகிரி விசாரித்து மணிமுத்துவுக்கு 2 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.6 ஆயிரத்து 500 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.