காசோலை மோசடி வழக்கில்பா.ஜனதா பிரமுகருக்கு 2 ஆண்டு சிறை
தூத்துக்குடியில் காசோலை மோசடி வழக்கில் பா.ஜனதா பிரமுகருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
தூத்துக்குடியில் காசோலை மோசடி வழக்கில் பா.ஜனதா பிரமுகருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது.
பா.ஜனதா பிரமுகர்
தூத்துக்குடி பிரையண்ட் நகர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வி.எஸ்.ஆர்.பிரபு. தூத்துக்குடி மாநகராட்சி முன்னாள் கவுன்சிலரான இவர், பா.ஜனதா கட்சியின் மாநில பொருளாதார பிரிவு செயலாளராக இருந்து வருகிறார்.
தூத்துக்குடி முத்துக்கிருஷ்ணாபுரம் 6-வது தெருவை சேர்ந்தவர் எஸ்.பரமசிவன். பால் வியாபாரியான இவரும், பிரபுவும் நண்பர்களாக பழகி வந்தனர். இதனால் பிரபு கடந்த 12.10.2008 அன்று பரமசிவனிடம் இருந்து கடனாக ரூ.5 லட்சம் வாங்கினார். இதற்காக தலா ரூ.2½ லட்சத்துக்கு 2 காசோலைகளை பிரபு கொடுத்து உள்ளார்.
மோசடி வழக்கு
இந்த 2 காசோலைகளையும் பரமசிவன் 16.12.2008 அன்று பணம் பெறுவதற்காக வங்கியில் கொடுத்தார். ஆனால், பிரபு கணக்கில் போதுமான பணம் இல்லாததால் 2 காசோலைகளும் திரும்பி வந்துவிட்டன.
இதுதொடர்பாக பரமசிவன், பிரபுவிடம் தெரிவித்து தனது பணத்தை திருப்பி தருமாறு கேட்டு உள்ளார். ஆனால், குறித்த காலத்தில் பணத்தை பிரபு திருப்பிக் கொடுக்கவில்லை. இதையடுத்து பரமசிவன் கடந்த 11.5.2009 அன்று தூத்துக்குடி 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் செக் மோசடி வழக்கு தாக்கல் செய்தார். பின்னர் இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி விரைவு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு நடந்து வந்தது.
2 ஆண்டு சிறை
இந்த நிலையில் வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு பி.ஏ.ஜலதி, குற்றம்சாட்டப்பட்ட பிரபுவுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் பரமசிவனுக்கு ரூ.10 லட்சத்தை இழப்பீடாக ஒரு மாதத்துக்குள் பிரபு வழங்க வேண்டும். தவறும்பட்சத்தில் மேலும் 2 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.