காசோலை மோசடி வழக்கில் தொழிலாளிக்கு 6 மாதம் ஜெயில் தண்டனை
காசோலை மோசடி வழக்கில் தொழிலாளிக்கு 6 மாதம் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கோவில்பட்டி:
காசோலை மோசடி வழக்கில் தொழிலாளிக்கு 6 மாதம் ஜெயில் தண்டனை விதித்து கோவில்பட்டி விரைவு கோர்ட்டு நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
லாரி வாங்க கடன்
விளாத்திகுளம் தேவர் தெருவைச் சேர்ந்த கருப்பசாமி மகன் சங்கர் (வயது 58). தனியார் லாரி சர்வீஸில் வேலை பார்த்து வந்தார். இவர் 2002 மார்ச் 4-ந் தேதி கோவில்பட்டியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வாகனம் வாங்குவதற்கு ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார்.
இந்நிலையில் கடனை வட்டியுடன் செலுத்துவதாக கூறி 2006 ஜூன் மாதம் ரூ.3 லட்சத்து 10 ஆயிரத்திற்கான காசோலையை நிதி நிறுவனத்திற்கு கொடுத்துள்ளார். நிதி நிறுவனம் சம்பந்தப்பட்ட வங்கியில் பணத்தை எடுக்க முயற்சித்த போது, சங்கர் அளித்த காசோலை கணக்கில் போதுமான நிதி இல்லை என திரும்பியுள்ளது.
காசோலை மோசடி வழக்கு
இதைதொடர்ந்து நிதி நிறுவன தலைமை நிர்வாக மேலாளர் பாலசுப்பிரமணியன் கோவில்பட்டி விரைவு கோர்ட்டில் சங்கர் மீது காசோலை மோசடி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த விரைவு கோர்ட்டு நீதிபதி முகமது சாதிக் உசேன், குற்றம் சாட்டப்பட்ட சங்கருக்கு 6 மாதம் ஜெயில் தண்டனையும், ஒரு மாதத்திற்குள் நிறுவனத்திற்கு ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் பணம் செலுத்த வேண்டும் என்றும், குறிப்பிட்ட காலத்திற்குள் பணம் செலுத்த தவறினால் மேலும் 3 மாதம் ஜெயில் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.