முந்திரி பயிர் பாதித்தால் உரிய நிவாரணம் வழங்க வேண்டும்


முந்திரி பயிர் பாதித்தால் உரிய நிவாரணம் வழங்க வேண்டும்
x

முந்திரி பயிர் பாதித்தால் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

அரியலூர்

தாமரைக்குளம்:

நிவாரணம்

அரியலூர் மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை அளித்து பேசினர். விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட அமைப்பாளர் பாலசிங்கம் பேசுகையில், அரியலூர் மாவட்டத்தில் 60 சதவீத முந்திரி விவசாயிகள் உள்ளனர். அவர்கள் முந்திரி விவசாயம் செய்துதான் குடும்பத்தை காப்பாற்றி வருகிறார்கள். மழைக்காலங்களில் முந்திரி பாதிக்கப்பட்டாலும், வெயில் காலங்களில் கருகிப் போனாலும், காற்றினால் பூக்கள் உதிர்ந்து போனாலும் அரசு எந்த கணக்கீடு செய்தும் நிவாரணம் வழங்குவதில்லை.

முந்திரி கொட்டை அன்னிய செலவாணி தொகையை ஈட்டக்கூடிய பொருட்களில் முக்கிய பங்கு வகிக்கிறது. அனைத்து பொருட்களின் விளையும் பல மடங்கு உயர்ந்துள்ள நிலையில், இந்தாண்டு ஒரு மூட்டை முந்திரி கொட்டை ரூ.7 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் முந்திரி விவசாயிகள் பெரும் பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர். எனவே முந்திரிக்கு குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய, மாநில அரசுகள் நிர்ணயம் செய்ய வேண்டும். முந்திரி விவசாயம் பாதிக்கப்படும்போது அரசு நிவாரணம் வழங்க வேண்டும். பயிர் காப்பீடு செய்து வழங்க வேண்டும். செந்துறை வட்டம், துளார் பெரிய ஏரி சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக தூர்வாரப்படாமல் உள்ளது. இந்த ஏரியை தூர்வாரி, கரைகளை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

குடிமராமத்து பணிகள்

விவசாயி மல்லூர் விஜயகுமார் பேசுகையில், அழிந்து வரும் நாட்டு மாட்டு இனங்களை பாதுகாக்க கிராமப்புற கிளை கால்நடை அலுவலகங்களில் கருவூட்டல் கட்டாயமாக ஏற்பாடு செய்து தர வேண்டும். மாவட்டத்தில் இந்த ஆண்டு மக்காச்சோளம் சாகுபடி செய்யும் விவசாயிகளை படைப்புழுவில் இருந்து காப்பாற்ற, வேளாண் துறை அரசு அலுவலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கிராமப்புற வேளாண் கூட்டுறவு சங்கங்களில் தட்டுப்பாடின்றி உரங்கள் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மருதையாற்றில் கருவேல செடிகளை அகற்றி, ஆற்றின் இருபுறமும் கரை அமைத்து தர வேண்டும், என்றார்.

தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் விஸ்வநாதன் பேசுகையில், மாவட்டத்தில் உள்ள நீர்நிலை வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கடந்த 2½ ஆண்டுகளாக குடிமராமத்து பணிகள் நடைபெறவில்லை. உடனடியாக குடிமராமத்து பணிகளை தொடங்க வேண்டும். மாவட்டத்தில் மணல் குவாரி அமைத்து மணல் எடுக்க தமிழக அரசு அனுமதி வழங்கக்கூடாது. நெல் கொள்முதலுக்கு பணம் பெறுவதை தடுக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

சுரங்கப்பாதை

தியாகராஜன் பேசுகையில், உரம், தளவாட பொருட்களை அரசு உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். ஆமணக்கந்தோண்டி கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையில் நான்கு ரோட்டில் விபத்துக்களை தடுக்க சுரங்கப்பாதை அமைக்க வேண்டும். அல்லது மேம்பாலம் கட்ட வேண்டும், என்றார். மேலும் விவசாயிகள் பேசினர். அவர்களின் கேள்விகளுக்கு அதிகாரிகள் பதில் அளித்தனர்.


Next Story