அரசு நிலம் அபகரிப்பு வழக்கில்மேலும் 5 பேரை பிடித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணை
அரசு நில அபகரிப்பு வழக்கில் மேலும் 5 பேரை பிடித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரியகுளம் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் அரசு நிலங்கள் அபகரிக்கப்பட்டன. வடவீரநாயக்கன்பட்டியில் 109 ஏக்கர், தாமரைக்குளத்தில் 60 ஏக்கர், கெங்குவார்பட்டியில் 13 ஏக்கர் என மொத்தம் 182 ஏக்கர் நிலம் அரசு அதிகாரிகள் துணையுடன் அபகரிக்கப்பட்டு, பல்வேறு நபர்களுக்கு பட்டா வழங்கப்பட்டதாக அதிகாரிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்தது. இதற்கு உடந்தையாக இருந்த 2 தாசில்தார்கள் உள்பட 7 பேர் கடந்த ஆண்டு பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
மேலும், பெரியகுளம் சப்-கலெக்டராக இருந்த ரிஷப் கொடுத்த புகாரின் பேரில், பெரியகுளத்தில் ஆர்.டி.ஓ.க்களாக பணியாற்றிய ஜெயப்பிரிதா, ஆனந்தி, தாசில்தார்கள் ரத்தினமாலா, கிருஷ்ணகுமார், மண்டல துணை தாசில்தார்கள் மோகன்ராம், சஞ்சீவ் காந்தி, நில அளவையர்கள் பிச்சைமணி, சக்திவேல், வடவீரநாயக்கன்பட்டி கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ், நில அளவையரின் உதவியாளர் அழகர், மண்டல துணை தாசில்தாரின் உதவியாளர் ராஜேஷ்கண்ணன், நிலத்தை அபகரித்த பெரியகுளம் அ.தி.மு.க. முன்னாள் ஒன்றிய செயலாளர் அன்னப்பிரகாஷ், முத்துவேல்பாண்டியன், போஸ் ஆகிய 14 பேர் மீது தேனி சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அதில் தாசில்தார் கிருஷ்ணகுமார், அன்னபிரகாஷ் உள்பட 8 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். இந்த வழக்குகளில் மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய பணி நீக்கம் செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் உள்பட 5 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று பிடித்தனர். அவர்களை தேனி சி.பி.சி.ஐ.டி. போலீஸ் நிலையத்துக்கு போலீசார் கொண்டு சென்றனர். அங்கு துணை சூப்பிரண்டு சரவணன், இன்ஸ்பெக்டர் சித்ரா தேவி ஆகியோர் பிடிபட்ட 5 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணை இரவிலும் தொடர்ந்தது. விசாரணை முடிவில் இந்த வழக்கில் மேலும் சிலர் கைது செய்யப்படுவார்கள் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.