போலி பிறப்பு சான்றிதழ் வழக்கில் மேலும் 4 பேர் கைது
சுரண்டை அருகே போலி பிறப்பு சான்றிதழ் வழக்கில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
சுரண்டை:
சுரண்டை அருகே போலி பிறப்பு சான்றிதழ் வழக்கில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
போலீசில் புகார்
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள வீரகேரளம்புதூரை சேர்ந்தவர் தினேஷ் (வயது 32). இவர் கடந்த மாதம் தென்காசி போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜிக்கு அனுப்பிய புகார் மனுவில், வீரகேரளம்புதூர் பகுதியில் பச்சிளம் குழந்தைகள் கடத்தப்பட்டு போலி பிறப்பு சான்று தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது என தெரிவித்து இருந்தார்.
இதுகுறித்து உடனடியாக விசாரணை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து சுரண்டை இன்ஸ்பெக்டர் சுதந்திராதேவி, வீரகேரளம்புதூர் சப்-இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி ஆகியோர் விசாரணை நடத்தினார்கள்.
போலி பிறப்பு சான்றிதழ்
இதில், வீரகேரளம்புதூர் அருகே ராஜகோபாலபேரி கிராமம் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கதிரேசன் (32), சுரண்டை அருகே கூழிபொத்தை அருணாசலபுரத்தை சேர்ந்த ஜானகி (49) ஆகியோர் சேர்ந்து பலருக்கு போலி பிறப்பு சான்றிதழ் தயார் செய்து கொடுத்தது தெரியவந்தது.
அதாவது தமிழ்நாடு அளவில் குழந்தைகளை கடத்தி விற்பனை செய்யும் கும்பல்கள் இவர்களை தொடர்பு கொண்டு போலி பிறப்பு சான்றிதழ்கள் பெற்றதும், அதில் அரசு முத்திரை போல் தயாரித்து போலியாக முத்திரை பதித்து கொடுத்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவத்தில் ஈரோடு மாவட்டம் பூந்துறை ரோட்டை சேர்ந்த கவிதா (39) என்ற பெண்ணுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவரை போலீசார் தேடி வந்தனர்.
மேலும் 4 போ் கைது
இந்த நிலையில் கவிதாவை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, இந்த சம்பவத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. கவிதா கொடுத்த தகவலின் பேரில் சாம்பவர் வடகரையை சேர்ந்த கோட்டை நாடார் மகன் ராமசாமி (45), பிள்ளை பெருமாள் மனைவி பொன்னம்மாள் (75), குலையநேரியைச் சேர்ந்த மாடசாமி மகன் சரவணன் (39) ஆகியோரை பிடித்து விசாரித்தனர். இதில் தமிழகம் முழுவதும் ஆறுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு பல லட்ச ரூபாய் வாங்கிக்கொண்டு போலி பிறப்பு சான்றிதழ் வழங்கியது தெரியவந்தது.
இதையடுத்து கவிதா, ராமசாமி, பொன்னம்மாள், சரவணன் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஆலங்குளம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.