தூத்துக்குடியில் இளம்பெண் பலாத்கார வழக்கில் மேலும் ஒரு வாலிபர் கைது


தினத்தந்தி 9 Sept 2023 12:15 AM IST (Updated: 9 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் இளம்பெண் பலாத்கார வழக்கில் மேலும் ஒரு வாலிபர் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் காதலனை தாக்கி விரட்டி விட்டு, இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் மேலும் ஒரு வாலிபர் கைது செய்யப்பட்டார்.

இளம்பெண் பலாத்காரம்

தூத்துக்குடியை சேர்ந்த 22 வயது வாலிபர் ஒருவர் தனது காதலியான 21 வயது இளம்பெண்ணுடன் சம்பவத்தன்று இரவு 10.45 மணியளவில் தெற்கு பீச் ரோட்டோரத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் காதல் ஜோடியை மிரட்டினர். பின்னர் காதலனை தாக்கி விரட்டி விட்டு, இளம்பெண்ணை மிரட்டி தங்கள் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு கடற்கரை சாலையில் உள்ள ஒரு உப்பளத்துக்கு சென்றனர். அங்கு இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பி சென்று விட்டனர்.

மேலும் ஒருவர் கைது

இதுகுறித்து அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில், தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் தூத்துக்குடி சிதம்பரநகரை சேர்ந்த வேல்முருகன் (24) என்பவரை பிடித்து நேற்று முன்தினம் கைது செய்தனர்.

மேலும், பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் தொடர்புடைய லயன்ஸ்டவுனை சேர்ந்த யோசேப்பு (30) என்பவரை தேடி வந்தனர். அவரையும் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.


Next Story