சக்கம்மாள்புரம் கிராமத்தில்புதிய ரேஷன் கடை கட்டிடம் திறப்பு விழா


சக்கம்மாள்புரம் கிராமத்தில்புதிய ரேஷன் கடை கட்டிடம் திறப்பு விழா
x
தினத்தந்தி 20 Jan 2023 12:15 AM IST (Updated: 20 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சக்கம்மாள்புரம் கிராமத்தில் புதிய ரேஷன் கடை கட்டிடம் திறப்பு விழா நடந்தது.

தூத்துக்குடி

எட்டயபுரம்:

விளாத்திகுளம் அருகே உள்ள சக்கம்மாள்புரம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.7 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய ரேஷன் கடை கட்டிடம் திறப்பு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு ஜீ.வி.மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, கடையை திறந்து வைத்து பொதுமக்களுக்கு பொருட்களை வழங்கினார். தொடர்ந்து கிராம மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது அவரிடம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கொடுத்த மனுவில், பள்ளியில் பழுதடைந்த வகுப்பறை கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டன. அதற்கு பதிலாக புதிய கட்டிடங்கள் கட்டித்தர வேண்டும். வள்ளிநாயகிபுரத்தில் இருந்து பள்ளிக்கு வரும் மாணவ- மாணவிகளுக்கு வாகன வசதி செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார்.

தொடர்ந்து விளாத்திகுளம் வட்டார வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் வீரபாண்டியபுரம் கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் அனைத்து துறைகள் பங்கேற்கும் சிறப்பு முகாமை அவர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சரின் மானாவாரி வேளாண்மை திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ரூ.2 ஆயிரத்து 500 மதிப்பிலான நியூட்ரிசாப் பயிர் பூஸ்டர் டானிக் மற்றும் கம்பு செயல் விளக்கத்திடல் திட்ட பயனாளிகளுக்கு எக்டேருக்கு ரூ.6 ஆயிரம் மதிப்பிலான இடுபொருள்கள் அடங்கிய தொகுப்பை வழங்கி பேசினார். அங்கு வேளாண்மை உழவர் நலத்துறை நலத்துறை சார்பில் கருத்து கண்காட்சி நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில், விளாத்திகுளம் தி.மு.க மேற்கு ஒன்றிய செயலாளர் அன்பு ராஜன், விளாத்திகுளம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முக விஜயன், வேளாண் உதவி இயக்குனர் கீதா, ஊராட்சி மன்ற தலைவர்கள் சண்முகப்பிரியா, லக்கம்மாள், தூத்துக்குடி மாவட்ட தி.மு.க இளைஞரணி துணை அமைப்பாளர்கள் இம்மானுவேல், மகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்


Next Story