சென்னசமுத்திரம், கொடுமுடி பகுதிகளில்தெருவில் சுற்றித்திரிந்த 30 நாய்கள் பிடிபட்டன
சென்னசமுத்திரம், கொடுமுடி பகுதிகளில் தெருவில் சுற்றித்திரிந்த 30 நாய்கள் பிடிபட்டன.
கொடுமுடி
சென்னசமுத்திரம் மற்றும் கொடுமுடி பேரூராட்சி பகுதிகளில் சுற்றித்திரிந்த தெருநாய் ஒன்று நேற்று முன்தினம் சிறுவன் உள்பட 13 பேரை கடித்தது. இதில் காயம் அடைந்தவர்கள் கரூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். எனவே தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து சென்னசமுத்திரம் பேரூராட்சி தலைவர் பத்மா குழந்தைவேலு, கொடுமுடி பேரூராட்சி தலைவர் திலகவதி சுப்பிரமணி ஆகியோர் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும் இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்துக்கும் புகார்கள் சென்றன.
இதைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், தெருநாய்களின் தொல்லைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்பேரில் நேற்று மதுரையில் இருந்து தெருநாய்களை பிடிப்பவர்கள் வாகனத்துடன் சென்னசமுத்திரம் மற்றும் கொடுமுடி பகுதிக்கு வந்து தெருவில் சுற்றித்திருந்த நாய்களை பிடித்தனர். மொத்தம் 30 தெருநாய்கள் பிடிக்கப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.