சென்னிமலை பகுதியில்நிலம் கையகப்படுத்தும் திட்டத்தை ரெயில்வே துறை கைவிட வேண்டும்;நில உரிமையாளர்கள், கலெக்டரிடம் மனு
சென்னிமலை பகுதியில் நிலம் கையகப்படுத்தும் திட்டத்தை ரெயில்வே துறை கைவிட வேண்டும் என்று நில உரிமையாளர்கள், கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
சென்னிமலை பகுதியில் நிலம் கையகப்படுத்தும் திட்டத்தை ரெயில்வே துறை கைவிட வேண்டும் என்று நில உரிமையாளர்கள், கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
நிழற்குடை
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். கோபி அருகே உள்ள ஆண்டிக்காடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் கொடுத்திருந்த கோரிக்கை மனுவில் தெரிவித்து இருந்ததாவது:-
எங்கள் பகுதியில் ஆத்துப்பாலம் பழைய ரோட்டில் பயணிகள் வசதிக்காக நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. சமீபகாலமாக நிழற்குடையை பயணிகள் யாரும் பயன்படுத்தப்படாமல் பயனற்று கிடக்கின்றது. மேலும் அங்கு கஞ்சா விற்பனை, மதுவிற்பனை என பல்வேறு சமூக விரோத செயல்கள் நடைபெற்று வருகின்றது. இதுகுறித்து போலீசில் புகார் தெரிவித்தும், தொடர்ந்து சமூக விரோத செயல்கள் நடைபெற்று வருகின்றன. எனவே பயன்பாட்டில் இல்லாத இந்த நிழற்குடையை அகற்ற வேண்டும். மேலும் நாங்கள் குடியிருக்கும் பகுதியையொட்டி புதிய நிழற்குடை அமைத்து கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் தெரிவித்து இருந்தனர்.
நிலம் கையகப்படுத்துதல்
சென்னிமலை பகுதியை சேர்ந்த நில உடைமைதாரர்கள் கொடுத்திருந்த மனுவில், 'சென்னிமலை பகுதியில் ரெயில்வே பணிமனை அமைப்பதற்காக ரெயில்வே துறை நிலம் கையப்படுத்தப்பட உள்ளது.
இதையொட்டி நிலமெடுப்பு பணிகள் முழுமையாக முடிக்கப்படும் வரை அங்கு பத்திரப்பதிவுகள் எதுவும் மேற்கொள்ள வேண்டாம் என சென்னிமலை சார் பதிவாளருக்கு உத்தரவு பிறக்கப்பட்டு உள்ளது. இதனால் அங்கு சுமார் 32 ஏக்கர் நிலம் வைத்துள்ள 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளோம்.
இந்த திட்டத்தை எதிர்த்து நாங்கள் போராட்டம் நடத்தியும், கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியும் உள்ளோம். பத்திர பதிவுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதால், எங்களின் நிலங்களை குடும்ப மேம்பாட்டிற்காக விற்கவோ, வாங்வோ அல்லது வேறு எந்த ஒரு பரிவர்த்தனையும் செய்ய இயலாமலும், மருத்துவ செலவுக்கு கூட பணம் ஏற்பாடு செய்ய முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனால் நாங்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகி உள்ளோம். எனவே நிலம் கையகப்படுத்துதல் திட்டத்தை கைவிட்டு, கடந்த 6 மாதங்களாக எங்களுக்கு ஏற்பட்ட இழப்பீட்டை கணக்கீடு செய்து வழங்க வேண்டும்' என்று கூறி இருந்தனர்.
வீட்டுமனை பட்டா
ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் கே.எஸ்.கோபால் தலைமையில் பொதுமக்கள் கொடுத்திருந்த மனுவில், 'ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.
இவர்கள் தாங்கள் குடியிருந்து வரும் வீட்டுக்கு சொத்து வரி, குடிநீர் வரி, குப்பை வரி, மின் கட்டணம் ஆகிய வரி இனங்களை அரசுக்கு தவறாமல் செலுத்தி வருகிறார்கள்.
வீட்டு மனைக்கு பத்திர பதிவு செய்து 100 ஆண்டுகாலமாக குடியிருந்து அனுபவித்து வருகிறார்கள். மாநகராட்சி நில அளவை அலுவலகத்தில் எங்களது இருப்பிடம் பட்டாவில் சர்க்கார் புறம்போக்கு என தவறுதலாக பதிவாகி உள்ளது. அதனால் எங்களுடைய ஆவணங்களையும், இருப்பிடத்தையும் ஆய்வு செய்து எங்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறி இருந்தனர்.
190 மனுக்கள்
இதேபோல் மொத்தம் 190 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், அதை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
அதைத்தொடர்ந்து தொழிலாளர்கள் நல வாரியம் மூலம், பணியின்போது இறந்த ஒருவரின் குடும்பத்தினர் 4 பேருக்கு தலா ரூ.1 லட்சத்து 25 ஆயிரமும், இயற்கை மரணம் அடைந்த 19 தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.55 ஆயிரமும் என மொத்தம் ரூ.15 லட்சத்து 10 ஆயிரம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மேலும் ஓயா உழைப்பின் ஓராண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியில் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மாணவிக்கு பாராட்டு சான்றிதழை கலெக்டர் வழங்கினார்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் குமரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ரங்கநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.