சென்னிமலையில் கிறிஸ்தவ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
சென்னிமலையில் கிறிஸ்தவ அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சென்னிமலை அருகே கத்தக்கொடிகாடு என்ற பகுதியை சேர்ந்தவர் அர்ச்சுணன் என்கிற ஜான் பீட்டர். கடந்த 17-ந் தேதி இவர் தன்னுடைய வீட்டில் மனைவி, மகள், மகன் மற்றும் மருமகள் என 5 பேர் பிரார்த்தனை கூட்டம் நடத்தியபோது அங்கு வந்த சிலர் அர்ச்சுணன் குடும்பத்தினரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரை கைது செய்து உள்ளனர்.
இந்த நிலையில் ஜான் பீட்டர் குடும்பத்தினரை தாக்கிய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி சென்னிமலை பஸ் நிலையம் முன்பு கிறிஸ்தவ முன்னணி சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கிறிஸ்தவ முன்னணி அமைப்பின் தலைவர் டி.சரவணன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், கிறிஸ்தவ முன்னணி, இயேசுவின் நற்செய்தி இயக்கம் (ஈரோடு) மற்றும் ஈரோடு மாவட்ட அனைத்து கிறிஸ்தவ அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினார்கள்.
இதில் ஈரோடு, திருப்பூர் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த கிறிஸ்தவ அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.