செட்டிக்குறிச்சியில் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
செட்டிக்குறிச்சியில் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
செட்டிகுறிச்சி:
கயத்தாறு அருகே செட்டிகுறிச்சியில் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக தற்கொலை செய்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிளஸ்-2 மாணவி
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே செட்டிகுறிச்சி பஞ்சாயத்து தெற்கு கோனார்கோட்டை கிராமம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் பரமசிவன். விவசாயி. இவருடைய மனைவி கிருஷ்ணம்மாள். இவர்களுக்கு மகேசுவரி (வயது 17), கார்த்திகா ஆகிய 2 மகள்கள் உண்டு. மகேசுவரி, கழுகுமலையில் உள்ள பள்ளிக்கூடத்தில் பிளஸ்-2 படித்து வந்தார்.
தற்கொலை
நேற்று முன்தினம் இரவில் வீட்டில் அனைவரும் தூங்கிய பின்னர் மகேசுவரி திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நள்ளிரவில் கண்விழித்த தாயார் கிருஷ்ணம்மாள் தனது மகள் மகேசுவரி தூக்கில் பிணமாக தொங்கியதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் கயத்தாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணி திலீப் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இறந்த மகேசுவரியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
காரணம் என்ன?
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவி எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கயத்தாறு அருகே பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.