சிதம்பரத்தில் துளையிடும் ராட்சத எந்திரம் மீது விரைவு பஸ் மோதல்; டிரைவர் பலி 8 பேர் படுகாயம்


சிதம்பரத்தில்  துளையிடும் ராட்சத எந்திரம் மீது விரைவு பஸ் மோதல்; டிரைவர் பலி  8 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 2 Oct 2022 12:15 AM IST (Updated: 2 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிதம்பரத்தில் துளையிடும் ராட்சத எந்திரம் மீது விரைவு பஸ் மோதிய விபத்தில் பஸ் டிரைவர் உயிரிழந்தார். மேலும் 8 பேர் படுகாயமடைந்தனர்.

கடலூர்

சிதம்பரம்,

சென்னையில் இருந்து நாகப்பட்டினத்திற்கு நேற்று முன்தினம் நள்ளிரவு அரசு விரைவு பஸ் ஒன்று பயணிகளுடன் புறப்பட்டது. பஸ்சை திருவாரூர் மாவட்டம் பெரும்பள்ளம் பகுதியை சேர்ந்த சகாதேவன் (வயது 57) என்பவர் ஓட்டி வந்தார்.

நேற்று அதிகாலை 4 மணியளவில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் புறவழிச்சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகே வந்து கொண்டிருந்தபோது, அங்கு பாலம் அமைக்கும் பணிக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துளையிடும் ராட்சத எந்திரம் மீது எதிர்பாராதவிதமாக பஸ் மோதியது.

டிரைவர் பலி

இதில் பஸ் டிரைவர் சகாதேவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் பஸ்சில் பயணம் செய்த டிரைவர் சகாதேவன் மனைவி வேம்பு (42), இவருடைய மகன் சுவாமிநாதன் (17), வேளாங்கண்ணி பகுதியை சேர்ந்த லாவண்யா (18), நாகப்பட்டினம் பகுதியை சேர்ந்த சாந்தி (52), சுபக்சா(19), சுஜிதா (24), சரீஷ் (20), தபான் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீசார் விசாரணை

இதற்கிடையே விபத்து பற்றி அறிந்த சிதம்பரம் நகர போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று, விபத்து குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் விபத்தில் பலியான சகாதேவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story