சின்னமனூர் நகராட்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
சின்னமனூர் நகராட்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
சின்னமனூர் நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. இந்த நகராட்சியில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு சாலையோரத்தை ஆக்கிரமித்து கடைகள் மற்றும் வீடுகள் கட்டியிருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் நகராட்சி அதிகாரிகளிடம் புகார் கொடுத்தனர். அதன்பேரில் அதிகாரிகள் ஆய்வு செய்தபோது ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட உள்ளதாக நகராட்சி நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று முன்தினம் சின்னமனூர் வடக்கு ரத வீதி பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்றும் பணி நடந்தது. போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. அப்போது அங்கு வந்த பொதுமக்கள் பாரபட்சத்துடன் ஆக்கிரமிப்பு அகற்றப்படுவதாக குற்றம்சாட்டினர். எனவே முறையாக ஆக்கிரமிப்பை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.