நெல்லையில் கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை


நெல்லையில் கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
x

ஆங்கில புத்தாண்டையொட்டி நெல்லையில் கிறிஸ்தவ ஆலயங்களில் நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

திருநெல்வேலி

ஆங்கில புத்தாண்டையொட்டி நெல்லையில் கிறிஸ்தவ ஆலயங்களில் நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

புத்தாண்டு கொண்டாட்டம்

2023-ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு நேற்று நள்ளிரவு பிறந்தது. இதையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள கத்தோலிக்க ஆலயங்கள், சி.எஸ்.ஐ. ஆலயங்களில் நள்ளிரவு 11 மணி அளவில் சிறப்பு பிரார்த்தனை தொடங்கியது. 12 மணிக்கு புத்தாண்டு பிறந்ததும், ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

பாளையங்கோட்டை சீவலப்பேரி ரோடு அந்தோணியார் ஆலயத்தில் முன்னாள் பிஷப் ஜூடு பால்ராஜ், டெரன்ஸ் அடிகள், பங்குதந்தை ஜான்சன் ஆகியோர் தலைமையில் புத்தாண்டு பிரார்த்தனை நடைபெற்றது. இதேபோல் தெற்கு பஜாரில் உள்ள சவேரியார் பேராலயத்தில் பிஷப் அந்தோணிசாமி, பங்கு தந்தை சந்தியாகு ஆகியோர் தலைமையிலும் புத்தாண்டு பிரார்த்தனையும், சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது. இதில் பிஷப் செயலாளர் மைக்கேல் பிரகாசம், உதவி பங்கு தந்தைகள் செல்வின், இனிகோ உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கேக்

பாளையங்கோட்டை ஊசி கோபுரம் சி.எஸ்.ஐ. கதீட்ரல் ஆலயம் உள்ளிட்ட அனைத்து சி.எஸ்.ஐ. ஆலயங்களிலும் நள்ளிரவில் புத்தாண்டு சிறப்பு ஆராதனையும், அதிகாலையில் நற்கருணை ஆராதனையும் நடந்தது.

புத்தாண்டை கொண்டாடும் வகையில் நெல்லை மாநகரில் சந்திப்பு, பாளையங்கோட்டை, டவுன் உள்ளிட்ட பெரும்பாலான பகுதியில் இளைஞர்கள் தயார் நிலையில் இருந்தனர். இரவு 12 மணிக்கு பட்டாசுகளை வெடித்து, கேக் வெட்டி புத்தாண்டை வரவேற்றனர். மேலும் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதேபோல் குடியிருப்பு பகுதிகளில் குடும்பத்தினர் பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

போலீஸ் பாதுகாப்பு

புத்தாண்டையொட்டி நெல்லை மாநகரம் முழுவதும் முக்கிய சந்திப்புகளில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ் குமார் உத்தரவின் பேரில் துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன் நேரடி மேற்பார்வையில் மாநகர பகுதியில் 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

நள்ளிரவுக்கு பிறகு மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனங்களில் சென்றவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினார்கள். புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு நள்ளிரவு 1 மணிக்கு பிறகு அனுமதி இல்லை என்பதால் வாகனத்தில் யாரும் அதிகமாக செல்லக்கூடாது என்று வாகனத்தில் சென்ற வாலிபர்களை போலீசார் எச்சரித்து இருக்கிறார்கள்.

இதேபோல் நெல்லை மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் நேரடி மேற்பார்வையில் மாவட்டம் முழுவதும் போலீசார் விடிய, விடிய வாகன சோதனையில் ஈடுபட்டனர்.


Next Story